பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பைப் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனிடையே பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா போட்டியின்போது மைதானத்தில் ரசிகர் ஒருவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி, அப்படி கூறக்கூடாது என்று சொல்லிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் போட்டி நடந்துகொண்டிருந்தபோது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட்டிருக்கிறார். ஆனால் அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிடக் கூடாது என்று அவரிடம் கூறியிருக்கிறார்.

அதற்கு அந்த ரசிகர் “போட்டியின்போது இந்திய ரசிகர்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறலாம் ஆனால் நாங்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூறக்கூடாதா?” என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார். இதற்கு பதிலளித்த போலீஸ் “ ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்வது சரியானது. ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்பது தவறானது” என்று கூறியிருக்கிறார்.
பேசிக்கொண்டே பாகிஸ்தான் ரசிகர் இதனை வீடியோவும் எடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவர் தனது நாட்டு வீரரை ஊக்கப்படுத்துவதற்காக அவ்வாறு சொல்லியிருக்கிறார். அவரை தடுத்தது தவறு என்று போலீஸ் அதிகாரியை விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கெனவே, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு போட்டியை காண இந்தியா வர விசா வழங்குவதில் தாமதம் செய்ததாகவும் சர்ச்சை எழுந்திருந்தது. மேலும், அஹமதாபாத் மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை நோக்கி ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்!’ கோஷங்களை எழுப்பியதும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இது சம்பந்தமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஐ.சி.சியிடமும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.