புதுடெல்லி: அயோத்தி அனுமன்கிரி கோயில் அர்ச்சகரான 44 வயது துறவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருமாதத்தில் இரண்டாவது சம்பவமாக இது நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் முக்கிய கோயில்களில் ஒன்றான அனுமன்கிரி கோயில் வளாகத்தில் சித்த பீடம் எனும் மடம் உள்ளது. இந்த மடத்தின் ஓர் அறையில் துறவியும் கோயிலின் துணை அர்ச்சகர்களில் ஒருவருமான ராம் சஹாரே தாஸ் (44), மேலும் 3 துறவிகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் இவர் பூஜைக்கு வராததால் அவரை தேடியபோது அவர் தனது அறையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். துறவி ராம் சஹாரேவின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. துறவியின் நெஞ்சிலும், முதுகிலும் கூட கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
சம்பவம் பற்றி அறிந்து போலீஸ்ஐ.ஜி. பிரவீன் குமார், மாவட்ட எஸ்எஸ்பி ராஜசேகர நாயர் மற்றும் அயோத்தி நகர போலீஸார் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
கொல்லப்பட்ட துறவி ராம் சஹாரே, உ.பி.யின் சந்த்கபீர்தாஸ் மாவட்டம், காண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு அருகிலுள்ளஅம்பேத்கர்நகர் மாவட்டத்தின் பிட்டியில் 10 பிகா நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இரு தரப்பினருடன் சில ஆண்டுகளாக தகராறு உள்ளது. இதுவே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ்திசை’ நாளிதழிடம் அயோத்தி நகரகாவல் நிலைய ஆய்வாளர் மணிசங்கர் திவாரி கூறும்போது, “இறந்தவருடன் தங்கியிருந்த 3 துறவிகளும் தலைமறைவாகி விட்டனர். உள்ளே இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் சம்பவத்தின்போது அணைக்கப்பட்டுள்ளன. கொலையான துறவி, நாகா சாது பிரிவைச் சேர்ந்தவர். இக்கொலைக்கு சொத்துப் பிரச்சினை காரணமாக இருக்கலாம்” என்றார்.
மாணவர் மர்ம சாவு: புதிதாக ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தி, உத்தரபிரதேசத்தின் புனித நகரமாக விளங்குகிறது. இங்கு பல கோயில்கள், மடங்கள் இருப்பதும் துறவிகள் அதிகமாக வசிப்பதும் புனித நகருக்கான காரணம் ஆகும். இச்சூழலில், சமீப நாட்களாக மடங்களின் சொத்துகளுக்காக துறவிகளுக்கு இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவமாக இக்கொலை நிகழ்ந்துள்ளது.
இதற்கு முன் அனுமன்கிரி கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்த மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் அயோத்தியில் சம்ஸ்கிருதம் பயின்று வந்தவர் ஆவார்.
கோயிலில் குண்டுவீச்சு: அயோத்தியின் குப்தா படித்துறையில் பஞ்சமுகி அனுமன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த அதன் தலைவரான துறவிவிமல் கிருஷ்ணதாஸ் மீது கடந்தமாதம் 4 கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இதில் அதிர்ஷ்டவசமாக துறவி உயிர் தப்பினாலும் கோயிலின் வாசல் சேதம் அடைந்தது.
அதிக சொத்துகளை கொண்ட இந்த அனுமன் கோயில் யாருக்கு சொந்தம் என்ற தகராறில் இந்த சம்பவம் நடைபெற்றதாக அயோத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர். இருப்பினும், இந்த இரண்டு சம்பவங்களிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.