ICC World Cup 2023, IND vs NZ: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 21ஆவது லீக் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. தரம்சாலா நகரில் உள்ள ஹிமாச்சல் பிரதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்மூலம், இந்திய அணி தொடர்ந்து 5ஆவது போட்டியில் சேஸிங் செய்கிறது.
இந்தியாவுக்கு சூப்பர் தொடக்கம்
கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இன்று விளையாடவில்லை. அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, ஷர்துல் தாக்கூருக்கு இன்று ஓய்வளிக்கப்பட்டு ஷமிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ், ஷமி ஆகியோர் நடப்பு தொடரில் முதல்முறையாக விளையாடுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் இன்று சரியாக அமையவில்லை. டேவான் கான்வே 0, வில் யங் 17 ரன்கள் என பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். இருப்பினும், அந்த இடத்தில் ரச்சின் ரவீந்திரா – டேரில் மிட்செல் உள்ளிட்டோர் அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்தனர்.
கோட்டைவிடப்பட்ட கேட்சுகள்
இருவரும் அரைசதம் கடந்து 150+ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இருப்பினும், ரச்சின் ரவீந்திரா 12 ரன்களில் இருக்கும்போது கொடுத்த கேட்சை ஜடேஜாவும், மிட்செல் சான்ட்னர் 69 ரன்களில் இருக்கும்போது கொடுத்த கேட்சை பும்ராவும் கோட்டைவிட்டனர். முன்னதாக, மிட்செல் கொடுத்த மற்றொரு கேட்சை கே.எல். ராகுலும் தவறவிட்டார். இத்தனை கேட்சைகளை தவறவிட்டது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. 6ஆவது பந்துவீச்சாளர் இல்லாத நிலையில், ஜடேஜா ஒரே மூச்சில் தனது 10 ஓவர்களையும் வீசி முடிந்தது குறிப்பிடத்தக்கது.
மிரட்டிய ஷமி
ஸ்கோர் 178 ஆக இருந்தபோது, ரச்சின் ரவீந்திரா 75 (87) ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், அதில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் அடக்கம். தொடர்ந்து, டாம் லாதம் 5, பிலிப்ஸ் 23, சாப்மேன் 6 ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
TAKE. A. BOW#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/EbD3trrkku
— BCCI (@BCCI) October 22, 2023
அந்த நிலையில், 48ஆவது ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் சான்ட்னர், மாட் ஹென்றி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் தனது ஆக்ரோஷமான யாக்கர்களால் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து கடைசி ஓவரிலும் மிட்செலை அவுட்டாக்கினார். மிட்செல் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 127 பந்துகளில் 130 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி பந்தில் பெர்குசன் ரன் அவுட்டாக நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஷமி 5, குல்தீப் யாதவ் 2, பும்ரா, சிராஜ் உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.