மருத்துவர்கள் கைவிட்ட சில நோயாளிகளுக்கும் திடீரென அவர்களுடைய வியாதி குணமாகியிருக்கும். ‘இட்ஸ் அ மெடிக்கல் மிராக்கிள்’ என்பார்கள் மருத்துவர்கள் இதை… கருவுறுதலிலும் இப்படி சில அதிசயங்கள் நடக்கும். அப்படிப்பட்ட ஒரு கேஸ் ஹிஸ்டரியைதான் இன்று நம்முடன் பகிரவிருக்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

”திருமணமாகி பதினைந்து வருடங்களாகியும் குழந்தையில்லாத ஒரு தம்பதியர், சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். அந்தப் பெண்மணிக்கு 40 வயது. அவருடைய கணவருக்கு 50 வயது. கடந்த 15 வருடங்களாகவே குழந்தையின்மை தொடர்பாக அந்தத் தம்பதியர் எந்த மருத்துவரையும் சந்திக்கவில்லையாம். முதல் முறையாக எங்கள் மருத்துவமனைக்குத்தான் வந்திருந்தார்கள். கணவருக்கு விறைப்புத்தன்மையில் பிரச்னை இருந்ததால், தாம்பத்திய உறவில் அடிக்கடி ஈடுபடாமல் இருந்திருக்கிறார். விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால், அவருக்குத் தேவையான சிகிச்சைகளைச் செய்துவிட்டு, ‘தினமும் தாம்பத்திய உறவில் ஈடுபடுங்கள்’ என்று அறிவுறுத்தினேன்.
‘இனி பிரச்னை சரியாகி விடும். அவர்களுக்கு குழந்தை உருவாகி விடும்’ என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் அந்தச் செய்தி தெரிய வந்தது. அவருடைய மனைவியின் கருப்பையில் பெரிய ஃபைப்ராய்டு கட்டி ஒன்று இருந்ததை ஸ்கேன் பரிசோதனையில் கண்டுபிடித்தோம். கணவர் விஷயத்தில் அவர்களுக்கு அப்போதுதான் நம்பிக்கை கொடுத்திருந்தோம். அவர்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அந்த நேரத்தில் ‘உங்களுடைய மனைவியின் கருப்பையில் பெரிய கட்டி இருக்கிறது. கரு உருவாகும் இடத்தை அந்தக் கட்டி அடைத்துக்கொண்டிருக்கிறது. அதைத்தாண்டி உங்களுக்கு குழந்தை உருவாக வாய்ப்பில்லை… அந்தக் கட்டியை ஆபரேஷன் செய்து நீக்க வேண்டுமென்றால், கருப்பையும் சேர்த்துதான் எடுக்க வேண்டும்’ என்று எப்படிச் சொல்வது..? அவர்களுடைய மகிழ்ச்சியை எப்படிக் கலைப்பது..? அந்தக் கட்டியை உடனடியாக நீக்க வேண்டியதில்லை என்பதால், அவர்களிடம் உண்மையைச் சொல்லாமல், அவருடைய மனைவிக்கு சில சத்து மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பினோம். ‘மூன்று மாதங்கள் கழித்து கட்டாயம் செக்கப்புக்கு வர வேண்டும்’ என்றும் சொல்லி அனுப்பினோம்.

ஆனால், அவர்கள் ஐந்து மாதம் கழித்து வந்தார்கள். அதுவும் மிக மகிழ்ச்சியாக… யெஸ், அந்தப் பெண் அப்போது கருவுற்றிருந்தார். ஸ்கேன் செய்து பார்த்ததில், கட்டி அப்படியே தான் இருந்தது. கூடவே கருவும் நல்லபடியாக இருந்தது. கணவருக்குக் கொடுத்த சிகிச்சை வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்பது தெரிந்தது. எத்தனையோ மெடிக்கல் மிராக்கிள்களை அனுபவத்தில் பார்த்திருந்தாலும், இது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி ஏற்படுத்திய அனுபவம். அதன்பிறகு, அந்த ஃபைப்ராய்டு கட்டியால் கருவுக்கு எந்தப் பிரச்னையும் வராத அளவுக்கு, பிரசவம் வரை அவரை கவனமாகப் பார்த்துக்கொண்டோம். இப்போது பெற்றோருடன் அந்தக் குழந்தையும் நலமாக இருக்கிறது…” – மகிழ்ச்சியாக முடித்தார் டாக்டர் காமராஜ்.