டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைய இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது. இதற்காக முன்வரிசையில் இஸ்ரேலின் டெடி பீர் என்றழைக்கப்படும் அதிநவீன புல்டோசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனிடையே இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையும் காசாவுக்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேல் சென்றபோது டெல்டா படை வீரர்களை சந்தித்துப் பேசினார். அமெரிக்க ராணுவத்தின் டெல்டா வீரர்கள் ஆப்கானிஸ்தான், இராக், குவைத், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரகசிய ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலும் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கும் ரகசிய நடவடிக்கையில் டெல்டா படை வீரர்கள் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 13,000 அமெரிக்க வீரர்கள் இஸ்ரேலில் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
2 அமெரிக்கர்கள் விடுதலை: ஹமாஸ் தீவிரவாதிகளிடம் சுமார் 200-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் உள்ளனர். அவர்களில் அமெரிக்காவை சேர்ந்த ஜூடித் ரனான், அவரது மகள் நடாலி ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இருவரையும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்படைத்தனர்.