மதுரை, சவுந்திரபாண்டிநகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரின் மனைவி அம்சவள்ளி. இவர்களுக்கு கார்த்திகை வள்ளி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது திருநெல்வேலி மாவட்டம், பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்று வரும் உலகப்புகழ் பெற்ற தசரா திருவிழாவை முன்னிட்டு குடும்பத்துடன் குலசேகரன்பட்டினத்தில் தங்கி உள்ளனர். அங்கு சூரசம்ஹாரம் நடைபெற உள்ள சிதம்பரேஸ்வரர் கோயில் பகுதியில் தங்கி ஊசி, பாசி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடித்துவிட்டு சிதம்பரரேஸ்வரர் கோயில் கடற்கரை பகுதியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

பெற்றோருடன் 2 வயது பெண் குழந்தையான கார்த்திகை வள்ளியும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். நள்ளிரவில் திடீரென கடற்கரைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தினை கேட்டு அம்சவள்ளி கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரை எழுப்பவே அவரும் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சத்தம் எழுப்பியவாறே ஓடிச்சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த வாலிபர், குழந்தையின் வாயைப் பொத்தியபடி கடத்திச் சென்றுள்ளதைப் பார்த்து அலறி கத்தியுள்ளார். இதனையடுத்து குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து போலீஸார் குழந்தையை தேடி வருகின்றனர். மேலும் கடற்கரைப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குழந்தையை கடத்தியவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், மணவாளபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ்- ரதி தம்பதி கடந்த 10 நாள்களுக்கு முன்பு குலசேகரன்பட்டினம் கோயிலில் தங்கி விரதம் மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுடன் நட்பாகப் பழகி ஒன்றரை வயது மகனை, ஹரீஷை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் அவரின் மனைவி திலகவதி ஆகியோர் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டு கடத்திச் சென்றனர். தனிப்படை போலீஸாரின் தீவிர தேடலில் 5 நாள்களுக்குப் பிறகே மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.