ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ஒடிசா மற்றும் தெலங்கானா எல்லையை ஒட்டியுள்ளது கோன்ட்டா. இந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மின் விநியோக கட்டமைப்புகளை நக்சலைட் தீவிரவாதிகள் சேதப்படுத்தினர். இதனால் கோன்ட்டா ஒன்றியத்தில் 142 கிராமங்கள் இருளில் மூழ்கின. சூரிய மின் விளக்குகளை மட்டுமே இங்குள்ள மக்கள் சார்ந்துள்ளனர்.
இந்நிலையில் கோன்ட்டா ஒன்றியத்தில் சுமார் 600 பேர் வசிக்கும் குண்டெட் என்ற கிராமம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாரம் மீண்டும் மின்சார வசதி பெற்றதுள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறும்போது, “நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக குண்டெட் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் பாதுகாப்பு படை முகாம் அமைக்கப்பட்டது. அங்குள்ள மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினோம்.
நக்சல் பிரச்சாரத்தால் கல்வி, சுகாதாரம், மின்சாரம், சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுள்ளதை மக்களிடம் விளக்கினோம். குண்டெட் கிராமத்துக்கு தற்போது மின்சார இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 -6 மாதங்களில் மேலும் 10 கிராமங்களுக்கு மின்சார இணைப்பு பணிகள் முடிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.