உதகை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல்வர், தாவரவியல் துறை பேராசிரியர் ஆகியோரை மீண்டும் உதகை அரசு கலை கல்லூரியில் பணியமர்த்தக்கூடாது என்று, தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பல்கலைக்கழகம், கல்லூரி ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி., எஸ்.டி.) ஆசிரியர் சங்க கோவை மண்டல செயற்குழு கூட்டம், உதகை அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கிளை தலைவர் விஜய், பொருளாளர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கதிரவன், பொதுச் செயலாளர் கண்ணையன் ஆகியோர் பேசினர்.
உதகை அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காகவும், துறை மாற்றத்துக்காகவும் பணம் பெற்ற குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கல்லூரி முதல்வர், தாவரவியல் துறை பேராசிரியர் ஆகியோரை மீண்டும் இந்த கல்லூரியிலேயே பணியமர்த்தினால், நிர்வாக சீர்கேடும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே தேவையற்ற அச்ச உணர்வும் ஏற்படும். எனவே, அவர்களை மீண்டும் இந்த கல்லூரியில் பணியமர்த்தக்கூடாது.
போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநரின் நேரடி மேற்பார்வையில், பேராசிரியர்களை கொண்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும். கவுரவ விரிவுரையாளர்களுக்கு துறை தலைவர் பொறுப்புகளை வழங்காமல், நிரந்தர பேராசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கான எஸ்.சி.,எஸ்.டி., செல் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வகுப்பு வாரியாக சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் பிற தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படும் போது, இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள தகுதியான கவுரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதல் படி ஊதியம் வழங்க வேண்டும்.
உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற பிஹெச்.டி கட்டாயம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். 2016-ம் ஆண்டுக்கு பின் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மண்டல நிர்வாகிகள் சுரேஷ்பாபு, சக்திவேல், சதாசிவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.