பனையூர்: சென்னை அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை போலீஸார் நேற்று அதிகாலை அகற்றினர். இந்த சம்பவத்தின்போது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் 110 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 5 பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர், ‘சீ ஷோர் டவுன்’ 6-வது அவென்யூவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு பாஜகவினர் கட்சிக் கொடிக் கம்பத்தை ஊன்றியுள்ளனர். இதற்கு அனுமதி ஏதும் பெறவில்லை என கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீஸார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
இதனால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கொடிக் கம்பத்தை அகற்ற வந்த கிரேன் வாகனத்தின் கண்ணாடிகளை பாஜகவினர் உடைத்தனர். மேலும், காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில மீனவர் அணி தலைவர் முனுசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸாரிடமும் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல் ஆணையர் வருகை: பின்னர் தாம்பரம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பாஜக கொடிக் கம்பத்தை நேற்று அதிகாலை போலீஸார் அகற்றினர். இதனால் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் பாஸ்கர் (44) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில், பாஜக நீலாங்கரை மண்டல தலைவர் மாரிமுத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த பாஸ்கரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 110 பேரை போலீஸார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்களை நேற்று மாலையில் விடுவித்தனர்.
5 பேரிடம் தொடர் விசாரணை: இதுகுறித்து கானத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிரேன் வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கன்னியப்பன்(37), பாலகுமார் (35), பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார்(42), மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேந்திர குமார்(49), நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலா(எ)வினோத்குமார்(34) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டியை போலீஸார் நேற்று மாலை தாம்பரத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
‘தினந்தோறும் 100 பாஜக கொடி கம்பங்கள் நடப்படும்’ – அண்ணாமலை
நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தினந்தோறும் 100 பாஜக கொடி கம்பங்கள் நடப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பனையூரில் பாஜக கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, திமுக அரசின் உத்தரவின்பேரில், நள்ளிரவில் வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பாஜகவினர் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
பாஜக தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் திமுக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.
நவ.1-ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த ஆண்டு பிப்.8-ம் தேதி (100-வது நாள்) காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மாநில செயலாளர் விவின் பாஸ்கர் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.