திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற் சவத்தின் 5-ம் நாளான நேற்றிரவு தங்க கருட வாகனத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வாகன சேவையின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா, கோவிந்தா எனும் பக்த கோஷமிட்டு சுவாமியை வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ முக்கிய விழாவான கருட வாகன சேவையை காண நேற்று திருமலையில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கூடினர். இதையடுத்து, திருமலையில் போலீஸார் உட்பட சுமார் 5 ஆயிரம் பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் கேமராக்கள் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டன.
நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருளினார். உடன் ஸ்ரீ கிருஷ்ணரும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மோகினிஅலங்காரத்தை காண மாட வீதிகளில் குவிய தொடங்கிய பக்தர்களின் கூட்டம், இரவு வரை காத்திருந்து கருட சேவையை கண்டுகளித்த பின்னரே அங்கிருந்து கலைந்து சென்றது. அதுவரைசுமார் 4 லட்சம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் உணவு, குடிநீர், டீ, காபி என அனைத்தும் 2,500 ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் விநியோகம் செய்தது.