திருவாரூர்: வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல்; அரிவாளை சுழற்றி விரட்டியடித்த முதியவர்!

திருவாரூர் அருகே முகமூடி அணிந்துகொண்டு வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களை, 82 வயது முதியவர் ஒருவர் அரிவாளால் வெட்டுவதுபோல் மிரட்டி விரட்டியடித்த சம்பவம், ஆச்சரயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நகையை போட்டுவிட்டு தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்கள் நான்கு பேர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையை தடுத்த 82 வயது முதியவர் வைரக்கண்ணு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (30). இவரின் கணவர் சஞ்சய்காந்தி சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 5வயதில் பெண் குழந்தை இருக்கிறது. சஞ்சய்காந்தி வெளிநாட்டில் இருப்பதால் ஜெயலட்சுமி குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அவருடைய வீடு ஒதுக்குபுறமாக தனியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலட்சுமியின் பாதுகாப்பிற்காக அவரின் மாமனார் வைரக்கண்ணு (82) தினமும் இரவு நேரத்தில் வீட்டில் வந்து தங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 9:30 மணியளவில் ஜெயலட்சுமி, வைரக்கண்ணு ஆகிய இருவரும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்துகொண்டு உள்ளே புகுந்த நான்கு கொள்ளையர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் உள்ளிட்ட நகைகளை கேட்டுள்ளனர்.

கொள்ளையர்கள்

பயத்தில் ஜெயலெட்சுமியும் கழற்றிக் கொடுத்திருக்கிறார். உடனே வைரக்கண்ணு `நகையைக் கொடுக்காதம்மா…’ என்ற உரக்கச் சொல்லியிருக்கிறார். அதையடுத்து, கொள்ளையர்களில் ஒருவன் கத்தியால் வைரக்கண்ணுவைக் குத்தப் பார்த்திருக்கிறான். உடனே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொள்ளையர்களை நோக்கி வெட்டுவதற்கு பாய்ந்த வைரக்கண்ணு, கொள்ளையர்களை நோக்கி அரிவாளைச் சுற்றியிருக்கிறார்.

`ஒழுங்கா நகையை கீழே போடுங்க, இல்லை என்றால் நடக்குறதே வேற’ என முதியவர் ஆத்திரமாகக் கூறியிருக்கிறார். இதில் பயந்துபோன கொள்ளையர்கள், கொள்ளையடித்த நகை உள்ளிட்ட பொருள்களைப் போட்டுவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பித்து ஓடி விட்டனர்.

கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்கள்

இதனைத் தொடர்ந்து சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி (பொறுப்பு) திருவாரூர் சரவணன் தலைமையில் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் கச்சனம் அம்மனூர்ப் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் (26), ராஜேஷ் (22),சினநேசன் (23), விளத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்ராஜா ஆகிய நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “தப்பிச் சென்ற கொள்ளையர்கள் உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடைக்காரரின் சென்போனை வாங்கி ஒருவருக்கு போன் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்கள்

அவர்களது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தவே, அது குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீஸ் டீம், அவர்கள் பேசிய செல்போன் நம்பரின் டவரை வைத்து கொள்ளையர்களைக் கைதுசெய்திருக்கிறது. அவர்களிடம் மேலும் விசாரணை தொடர்கிறது” என்றனர்.

82 வயது முதியவர் தனி ஆளாக கொள்ளையர்களான இளைஞர்களை விரட்டியடித்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. `துணிவு’டன் ஆயுதமேந்திய கொள்ளையர்களை எதிர்கொண்ட முதியவருக்கு பாராட்டுகள் குவிகின்றன!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.