மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. அதிகாரிகளிடம், அமைச்சர் ஜீவன் எடுத்துரைப்பு

மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. அதிகாரிகளிடம், அமைச்சர் ஜீவன் எடுத்துரைப்பு

மலையக மக்கள் எதிர்நோக்கிய உரிமை ரீதியான பிரச்சினைகள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிரான சில பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், உழைப்பு சுரண்டல்கள் மற்றும் மலையக மக்களுக்காக நாம் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய பிரதானிகளிடம் நீர் வழங்கள் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தமது தொழிற்சங்கத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக பிரதானிகளுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் உயர்தானிர் அலுவலகத்தின் பிரதானி மேதகு செட்யா ஜெனிங்ஸ், இலங்கை தொடர்பான இலங்கைக்கான மனித உரிமை பிரிவின் தலைமை அதிகாரி எலினா செங் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த 200 வருடங்களாக கடந்துவந்த பாதை குறித்தும், அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் மனித உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒகோடோவா, மலையக பெருந்தோட்ட சமூகத்தின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது, நவீன அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு கம்பனிகளுக்கும், அரசுக்கும் அழுத்தங்களை பிரயோகித்தோம் என ஐ.நா. அதிகாரிகளிடம், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மலையகத்தில் நாம் முன்னெடுத்துள்ள வீட்டு திட்டம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டம், மலையக மக்களுக்கான விசேட காணி உரிமை வழங்கும் திட்டம் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டுள்ளதோடு இவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒருமுறை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயத்தின் தூதுக்குழு இலங்கைக்கும் பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.