சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் நேற்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் முகத்துவாரம் பகுதியில் பொதுமக்களால் கொட்டப்பட்ட குப்பைகள் மற்றும்அடர்ந்திருந்த புதர்செடிகள் ஆகியவற்றை, தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், அப்புறப்படுத்தி, அவ்விடத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக் கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மழைக்காலத்தில் பரவும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை தடுக்க மாநகராட்சி சார்பில் சீனிவாசபுரத்தில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசு புகை பரப்பும் பணிகளையும் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடையாற்றின் முகத்துவாரப் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றிவருகிறோம். பட்டினப்பாக்கம் பகுதியில் மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால், கூடுதலாக கழிப்பறைகளை கட்ட திட்டமிட்டிருக்கிறோம்.
சென்னையில் இந்த ஆண்டு 443 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் மட்டும் 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் சிக்குன் குனியாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகரில் கொசு ஒழிப்பு பணியில் 3 ஆயிரத்து 300 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு) என்.மகேசன், மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.