லியோ திரைப்படத்துடன் இணைந்து வெளியானது பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி திரைப்படம் அதன் ஜலி ரிவ்யூவே இது.
சிறையில் கைதியாக இருக்கிறார், பாலகிருஷ்ணா (நெலக்கொண்டா பகவந்த் கேசரி). அங்கு பணியாற்றும் காவல்துறை அதகாரி ஶ்ரீகாந்த் (சரத்குமார்). பாலகிருஷ்ணாவுக்கு சரத்குமார் மிகப்பெரிய உதவி ஒன்றைச் செய்கிறார். இந்நிலையில் எதிர்பாராத விபத்தில் இறக்கிறார் சரத்குமார். பாலைய்யா சரத்தின் மகளை( ஸ்ரீ லீலாவை) ஒரு கனவுடன் வளர்க்கிறார். அது நிறைவேறியதா? என்பதை 300 பைட்டு, 400 பில்டப் என தன் வழக்கமான 4K பாலைய்யா மோடில் சொல்லாமல், சில பில்டப்கள், பைட்டுகள் என 1080p பாலைய்யா மோடில் சொல்லியிருக்கிறார்கள்.
சிறு வயதில் இருந்தே ஶ்ரீலீலாவிடம் ராணுவம், ராணுவம் என சொல்லி சொல்லி வளர்க்கிறார் பாலகிருஷ்ணா. ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கு அதில் துளிகூட விருப்பமில்லை என்பதைச் சொல்கிறார், ஶ்ரீலீலா. எப்படியாவது இவரை ராணுவத்தில் சேர்த்துவிட்டு, சரத்குமாரின் கனவை நிறைவேற்ற பெரும்பாடு படுகிறார்.

இதற்கிடையில் தன் மகளுக்கொரு பிரச்னை வர, ஆக்ஷன் அவதாரம் எடுத்து ஆர்ப்பரிக்கிறார், பாலைய்யா. தன் மகளுக்கு பிரச்னை கொடுக்கும் நபர் யார், அதற்காக காரணம் என்ன, அவருக்கும் பாலையாவுக்கும் என்ன தொடர்பு, இவர்களுக்குள் நடக்கும் களேபரங்களில் ராணுவத்தில் இணையும் கனவு என்னவானது என படம் நீள்கிறது.
நெலக்கொண்டா பகவந்த் கேசரியாக பாலகிருஷ்ணா. ஒன் மேன் ஷோ. அவருக்கே உரிய மேனரிஸத்தில் மிளிர்கிறார். “விஜ்ஜி பாப்பா…, விஜ்ஜி பாப்பா…” என ஶ்ரீலீலாவிடம் அன்பைப் பொழிவதும், அவருக்காக கண்கலங்குவதும் என ஸ்கோர் செய்கிறார். வில்லன்களிடம் பஞ்ச் டயலாக்குகள் பேசி, அடித்து அவர்களை காற்றில் பறக்க விடுவதில் பாலையாவுக்கு நிகர் அவரே. எட்டி உதைத்து இன்னோவா காரை ஒரு கிலோமீட்டருக்கு ரிவர்ஸில் செல்ல வைப்பது, ஒரு கத்தியை வைத்து முப்பது, நாற்பது பேரை துவம்சம் செய்வது, ரயிலை ஓட்டிக்கொண்டு வந்து பல டாடா சுமோக்களை இடித்து சிதற செய்வது போன்ற கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத காட்சிகள் பாலையா படத்தில் தான் இருக்கும். அதுதான் பாலையா படத்தில் மக்கள் எதிர்ப்பார்பதும் கூட. அப்படியாக இந்தப் படமும் BCU தான் ( பாலைய்யா சினிமாட்டிக் யுனிவர்ஸ்)

அதுபோல, இந்தப் படத்தின் இன்டர்வெல் ப்ளாக்கில் லாரியில் பறந்து வருவார். தரையில் இறங்கும்போது லாரியின் ஒவ்வொரு பாகங்களாக பிரிந்து விழும். முகத்திலும் உடலிலும் சின்ன ரத்தக்காயம் கூட இல்லாமல் ஸ்லோ மோஷனில் பாலைய்யா நடந்து வரும் காட்சி அவரது ரசிகர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘Bro I don’t Care’ என்பதுதான் படத்தின் டேக் லைன். இந்த சாதாரண வசனம்கூட ஹைடெசிபளில் பாலையா பேசும்போது, ஸ்பீக்கர்கள் அதிர்கின்றன. அது போல, பாலையாவின் லாஜிக் இல்லா மேஜிக்குகளை திரைக்கும் பார்க்கும்போது, நாமளும் `we don’t care’ என்ற மனநிலையில் அதனை அணுக வேண்டும் என்பது நிபந்தனை. தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த நடிகைகளுடன் ஜோடியாக நடித்து, டூயட் பாடுவது என்பது பாலைய்யாவுக்கு புதிதல்ல. ஆனால், இதில் ஶ்ரீலீலாவுக்கு வளர்ப்புத் தந்தையாக நடிக்கும் முடிவை எடுத்ததற்கு பாலையாவுக்கு பாராட்டுகள் !
ஶ்ரீலீலாதான் படத்தின் மையம். சிச்சா… சிச்சா என பாலையாவின் மகளாகவே வாழ்ந்திருக்கிறார். ஶ்ரீலீலா கொடுக்கும் குட்டி குட்டி ரியாக்ஷன்கள் க்யூட் ! ஶ்ரீலீலாவின் டான்ஸ்தான் இன்ஸ்டா ரீல்ஸை அலங்கரிக்கும் மெட்டீரியல். அதற்காகவே, அவருக்கு தனியே பாடல் வைக்கலாம் என்று நினைக்காமல் கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார்கள். ஆக்ஷன் சீக்வென்ஸில் வாவ் சொல்ல வைத்திருக்கிறார்.

சைக்காலஜிஸ்ட் காத்யாயினியாக வரும் காஜல் அகர்வாலுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை. வில்லனாகத் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியிருக்கிற அர்ஜுன் ராம்பாலுக்கு எலைட்டான ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரம். அதை நன்றாகவே செய்திருக்கிறார். தவிர, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், விடிவி கணேஷ் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களாக வருகிறார்கள்.
சாதாரண கதையை எடுத்துக்கொண்டு, அதை பாலையாவுக்கு என்று வடிவமைத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார், இயக்குநர் அனில் ரவிப்புடி. ஆக்ஷன் டிராமாவாக இருந்தாலும் அதில் இடம்பெறும் காமெடி வசனங்கள் இவர் படங்களில் கவனிக்கப்படும். இந்தப் படத்திலும் அது வொர்க்காகியிருக்கிறது. வில்லன் பேசும் மாஸான வசனத்தை பாலைய்யா காமெடியாக்கிய காட்சி, பஸ்ஸில் நடக்கும் ஸ்டன்ட் காட்சியில் வின்டேஜ் தெலுங்குப் பாடலை ஓடவிட்டு, அதற்கேற்றவாறு ரியாக்ட் செய்துகொண்டே சண்டை போடும் காட்சி, போலிஸின் வயிற்றில் நெருப்பு பற்ற வைத்து, அதில் டீயை சூடேற்றும் காட்சி ஆகியவை அதற்கு உதாரணங்கள்.

ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனில் ரவிப்புடி பாலையா வைத்து கொடுத்தது ‘பகவந்த் கேசரி’ எனும் கம்ப்ளீட் காக்டெயில் ! பாலையாவின் ப்ளாஷ்பேக் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். தமனின் இசையில் ‘The roar of Kesari’ கவனிக்க வைக்கிறது. ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு ஸ்டன்ட் காட்சிகளில் சூப்பர். பாலைய்யாவின் இன்ட்ரோ, இன்டர்வெல், க்ளைமேக்ஸில் ஶ்ரீலீலாவின் ஸ்டன்ட் ஆகியவை ஸ்டன்ட் இயக்குநர் வெங்கட்டின் நீட் கம்போஸிங் ! திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக விறுவிறுப்புடன் இருந்திருந்தால் ‘பகவந்த் கேசரி’ இன்னும் ஈர்த்திருக்கும்.
பாலையா படங்களுக்கென்று தனி இலக்கணம் உண்டு. அது பிடித்தவர்கள், பாலைய்யா படத்தை தியேட்டரில் மிஸ் செய்யமாட்டார்கள். ‘இவர் பண்ணா மட்டும்தான் சில விஷயங்களை மக்கள் ஏத்துக்குவாங்க’ என்று ரஜினியே ஒரு மேடையில் பாலைய்யாவை பற்றி பேசியிருப்பார். அது உண்மைதான். ஏன் என்றால் அவர் பாலைய்யா !
பாப்கார்னுடன் போங்க… பாலையாவை பாருங்க …!