INDvsNZ: `எந்த ஏமாற்றமும் இல்லை' – ஷமி; 'எங்க வேலை இன்னும் முடியல!' – ரோஹித்

உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய ஷமி ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.

விருதை வாங்கிவிட்டு அவர் பேசுகையில், ‘நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறேன். அணிக்கு திரும்பி உலகக்கோப்பையின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தது பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

Shami

அணியின் நலனுக்காக எடுக்கப்படும் முடிவுகளில் எனக்கு எப்போதுமே உடன்பாடு உண்டு. அணி சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நான் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டதில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை.’ என்றார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ‘உலகக்கோப்பை மாதிரியான ஒரு தொடரை இப்படி தொடங்கியிருப்பது சிறப்பான உணர்வாக இருக்கிறது. ஆனாலும், எங்களின் வேலை இன்னும் முடிந்துவிடவில்லை. வருங்காலத்தைப் பற்றி அதிகம் நினைக்காமல் இப்போதைய தருணத்தில் மகிழ்ந்திருக்க நினைக்கிறோம். நியூசிலாந்து அணி ஒரு 300 ரன்களை எட்டுவார்கள் என நினைத்தோம். எங்களின் பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தை கட்டுப்படுத்திவிட்டார்கள். ஷமி தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

Rohit Sharma

கோலியைப் பற்றி என்ன சொல்வது, அவர் இதே பணியைத்தான் அணிக்காக பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார்.

Virat

வரிசையாக விக்கெட் விழுந்த சமயங்களில் கோலியும் ஜடேஜாவும் நின்று ஆட்டத்தை வென்று கொடுத்துவிட்டார்கள். நானும் கில்லும் வெவ்வேறு ஸ்டைலில் ஆடுபவர்கள். ஆனாலும் எங்களுக்கிடையே ஒரு நல்ல புரிதல் இருக்கிறது. ஃபீல்டிங்கில் நாங்கள் மெச்சும் வகையில்தான் பெர்ஃபார்ம் செய்து வந்தோம். ஆனால், இன்றைய நாள் எங்களுடையதாக இல்லை. சிறந்த ஃபீல்டரான ஜடேஜாவே தவறுகளைச் செய்தார். இப்படியான நாட்களையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். வரவிருக்கும் ஆட்டங்களில் ஃபீல்டிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருக்கிறோம். வெவ்வேறு நகரங்களுக்கு சென்று வெவ்வேறுவிதமான சூழலில் போட்டிகளை ஆடுவதை மகிழ்ச்சியாக அனுபவிக்கவே செய்கிறோம்.’ என்றார்.

வாழ்த்துகள் இந்தியா!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.