புதுச்சேரி: சந்திர பிரியங்கா அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், இதை அரசிதழில் புதுச்சேரி அரசு வெளியிட்டது.
புதுச்சேரியில் முதல்வர் ரங்க சாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து வந்தார். இவரிடம் போக்குவரத்து, ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, கலை பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன.
இரண்டரை ஆண்டுகள் அமைச்சர் பதவியில் நீடித்த சந்திர பிரியங்கா அக். 10-ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டார். அதில் சாதி ரீதியிலும் பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன் என குறிப்பிட்டிருந்தார். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். அவரது செயல்பாடு சரியில்லாத தால் முதல்வர் ரங்கசாமி 6 மாதத் துக்கு முன்பாகவே நீக்கம் செய்து கடிதம் கொடுத்தார். அந்த கடிதம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டதாகவும் அவர் கூறினார்.
யூனியன் பிரதேசம் என்பதால் பதவி நீக்கத்துக்கு உள்துறை அமைச்சகத்தின் வழியே குடியரசுத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். இதனால் கடந்த 10 நாட்களாக சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என்றகேள்வியும், குழப்பமும் நீடித்துக் கொண்டிருந்தது. எதிர்க்கட்சியினரும் இது பற்றி கேள்வி எழுப்பினர்.
மத்திய உள்துறை அமைச்சர் தலைநகரில் இல்லாததால் பதவிநீக்கத்துக்கு அனுமதி கிடைக்க வில்லை. அதே வேளையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமே செயல்படுவதாக பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்திர பிரியங் காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையில், நேற்று புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டது.
பேரவைத் தலைவர் விளக்கம்: இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், “சந்திர பிரியங்கா அமைச்சர் பதவி நீக்கத்துக்கு ஒப்புதல் பெறகாலதாமதம் ஏற்பட்டு வருகிறது என்றும், பாஜக அவரது ராஜினாமாவை தடுக்க முயற்சித்தது என்றும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
அமைச்சர் பதவியில் இருந்து யாரை வேண்டுமானாலும் நீக்கவும், சேர்க்கவும் முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. சந்திர பிரியங்காவின் செயல்பாடுகள் 6 மாத காலமாக சரியில்லை என்ற காரணத்தால் முதல்வர் அவரை நீக்கினார். நீக்கிய பிறகு சந்திர பிரியங்கா ராஜினாமா என்ற பெயரில் ஒரு கடிதத்தை முதல்வரிடம் வழங்கியதோடு மட்டுமின்றி, நேரடியாக உள்துறை அமைச்சகத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பியதன் விளைவாக காலதாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்காவை முதல்வர் நீக்கினார் என்ற விளக்கத்தை நானும், ஆளுநரும் விளக்கிய பிறகு தற்போது அவர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது புதுச்சேரி அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.