தூய்மையான குடிநீரை வழங்குவதற்காக ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் அனைத்து உதவிகளை வழங்க வேண்டும்

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள ‘பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்’ என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் வழங்க வேண்டும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கையின் பிரகாரம் குடிநீர் வழங்கலுக்காக பிரதம அமைச்சின் கீழ் தனியானதொரு செயலகம் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத்தின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் உள்ள உலக வானிலை அமைப்பின் தலைமையகத்தில் (WMO) நடைபெற்ற இச்சந்திப்பில் ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத்தின் உப தலைவர் யோகானஸ் கல்மன், உலகளாவிய கண்காணிப்பு பணிப்பாளர் வில் ரைட்எட், தலைமை நிபுணத்துவ அதிகாரி கலாஸ் மொல்டிவ்ஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை சார்பாக, அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

குடிநீர் வழங்குதலில் ஏற்படவுள்ள கொள்கை ரீதியிலான மாற்றம், ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கை என்பன குறித்து ஐநா அதிகாரிகளுக்கு அமைச்சர்; இதன்போது விளக்கமளித்ததோடு, காலநிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டம் பற்றியும் விளக்கமளித்துள்ளார்.

குறிப்பாக ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கை ஊடாக, குடிநீர் தொடர்பான அனைத்து ஸ்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களை ஒன்றிணைத்து பிரதம அமைச்சரின் கீழ் தனியான செயலகமாக நீர்வழங்கல் கொண்டுவரப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள், அந்த செயலகம் எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அதேவேளை, ‘நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்துக்குள் பாதுகாப்பு மற்றும் தூய்மையான குடிநீர் என்பதும் பிரதான விடயமாக உள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை அடைவதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட எதிர்பாராத சூழ்நிலைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் இலக்கை அடைவது சவாலாக உள்ளது, எனவே, உரிய காலப்பகுதிக்குள் இலக்கை அடைவதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட வசதிகளை ஐநாவின் குடிநீருக்கான திட்டத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.’ ஏன்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.