பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த மஜதவின் கர்நாடக மாநிலத் தலைவர் சி.எம். இப்ராஹிமை அந்தப் பதவியில் நீக்கி மஜத தேசிய தலைவர் தேவகவுடா உத்தரவிட்டுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கு மஜதவில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் என்.எம்.நபி, மாநில துணைத் தலைவர் சையத் சஃபி ஃபுல்லா சையத், முன்னாள் டெல்லி பொறுப்பாளர் முகமது அல்தாஃப், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் நசீர் ஹுசைன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் என்.எம். நூர் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மஜதவின் கர்நாடக மாநில தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சி.எம். இப்ராஹிம் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவுடன் கூட்டணி வைத்த விவகாரத்தில் குமாரசாமி கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். கட்சியின் ஆட்சிமன்றக் குழு இந்த முடிவை எடுக்கவில்லை.
எனவே இந்தக் கூட்டணி செல்லாது. எனது தலைமையிலான மஜத, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை” என விமர்சித்தார்.
இதுகுறித்து மஜத தேசிய தலைவர் தேவகவுடா கூறுகையில், “கட்சியின் நலனுக்கு விரோதமாக செயல்பட்ட மாநில தலைவர் சி.எம். இப்ராஹிம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக குமாரசாமியை கட்சியின் ஆட்சி மன்றக் குழு தேர்வு செய்துள்ளது” என்றார்.
அமோக வெற்றி: பின்னர், முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசுகையில்,”சி.எம்.இப்ராஹிம் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன். அவரைப் பற்றி கேள்வி எழுப்பி எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற தேர்தலில் எங்களின் கூட்டணி கர்நாடகாவில் அமோக வெற்றி பெறும்” என்றார்.