மத்தியில் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை, அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் எப்படியாவது வீழ்த்தி ஆட்சிக் கட்டிலிலிருந்து கீழிறக்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க உட்பட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து `இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியமைத்திருக்கிறது. இந்த கூட்டணியானது, 2024 லோக் சபா தேர்தலை மையமாக வைத்து மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது.

நவம்பரில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் கூட, இந்தியா கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற காட்சிகள் சத்தீஸ்கரில் தனியாகக் களமிறங்குகின்றன. இருப்பினும், இந்தியா கூட்டணிக்கு வாக்கு கொடுத்திருக்கிறோம், என்றும் கூட்டணியிலிருந்து விலக மாட்டோம் என்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் முன்பு கூறியிருந்தார். இந்த நிலையில், “2024-ல் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து நீக்குவதே மிகப்பெரிய தேசப்பற்று செயல்” என கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
நேற்றைய தினம் டெல்லியில் தனது கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றிய கெஜ்ரிவால், “இரண்டாவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, நாட்டை மிகப்பெரிய முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. இன்றைக்கு நாட்டின் சூழல்அனைத்து பக்கங்களிலும் மோசமடைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். இத்தகைய தீவிர துருவமுனைப்பு இந்த சமூகத்தில் ஒருபோதும் காணப்படவில்லை.

எங்கும் அமைதியின்மை. இவ்வளவு சண்டைகள், வன்முறைகள், ஊழல்கள், கொள்ளைகள் போன்றவற்றை இதற்கு முன்பு பார்த்ததில்லை. எனவே, 2024-ல் பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அகற்றுவதே தேசப்பற்றின் மிகப்பெரிய செயல். அப்போதுதான் நாடு முன்னேறும்.

இன்னொருபக்கம், பல பெரிய தொழிலதிபர்களுக்குப் பின்னால் அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை பா.ஜ.க வைத்திருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், சுமார் 12 லட்சம் பணக்கார தனிநபர்கள், வணிகர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். இது மிகவும் தீவிரமான விஷயம். மேலும், பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் ஆகியவைதான் இன்று நாடு எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னைகள். இதுவரை, பா.ஜ.க-வுக்கு மாற்று இல்லை என்றுதான் மக்கள் கூறினர். ஆனால், இப்போது அனைவருமே இந்தியா கூட்டணியை மாற்றாகப் பார்க்கிறார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.