பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள பல ஏக்கர்கள் காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்கவும் – பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு
• அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்துக்கு சம்பந்தமான, அரசுடைமையுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பரிந்துரை
• தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை அதன் நோக்கங்களை நிறைவேற்றக்கூடிய பல்கலைக்கழகமொன்றாக மாற்றும் நடவடிக்கைக்கு குழு நியமனம்
அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்துக்கு சம்பந்தமான, அரசுடைமையுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள், பணியகங்கள், அதிகாரசபைகள் உள்ளிட்ட நிறுவங்களின் இது வரை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படாத 2012 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினை தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பரிந்துரை வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொடவின் தலைமையில் அண்மையில் (17) கூடிய இந்தக் குழுவில் அரச தொழில் முயற்சிகள் திணைக்களத்த்தின் 2022 ஆம் ஆண்டுக்கான செயலற்றுகை அறிக்கை மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை கருத்தில் கொள்ளப்பட்டதுடன், இதன்போதே இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஆண்டறிக்கைகள் நவம்பர் 30 க்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், அரச நிறுவனங்களை மீள்கட்டமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இணைக்கக்கூடிய அரச தொழில் முயற்சி திணைக்களத்துக்கு சம்பந்தமான நிறுவனங்கள் தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அத்துடன், குத்தகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான தோட்டங்கள் தொடர்பில் குழுவில் கலந்துரையாடப்பட்டதுடன், பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள பல ஏக்கர்கள் அளவான காணிகளில் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு வழங்க தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறும் குழு இதன்போது அறிவுறுத்தல் வழங்கியது.
அதற்கு மேலதிகமாக, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக குழுவில் புலப்பட்டது. அதற்கமைய தற்போதைய தொழில் போக்குகளுக்குப் பொருத்தமான வகையில் புதிய நான்கு பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு பாடநெறிகளை இதன்மூலம் அறிமுகப்படுத்த எதிரிபார்ப்பதாக இதன்போது அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் குறிக்கோளுக்கும் நோக்கத்துக்கும் பொருத்தமான வகையில் இந்த நடவடிக்கை இடம்பெற வேண்டும் என குழு இதன்போது சுட்டிக்காட்டியது. அதற்கமைய, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை அதன் நோக்கங்களை நிறைவேற்றக்கூடிய பல்கலைக்கழகமொன்றாக மாற்றும் நடவடிக்கைகளுக்காக உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் நிதியமைச்சின் தேசியத் திட்டமிடல் திணைக்களமும் வரவுசெலவுத்திட்ட திணைக்களமும் பிரதிநித்துவம் செய்யும் வகையில் விரிவான குழுவொன்றை நியமித்து அது தொடர்பில் குழுவுக்கு அறிவிக்குமாறு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நாளக பண்டார கோட்டேகொட, கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத், கௌரவ சஹன் பிரதீப் விதான, கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர, கௌரவ நிமல் லன்சா, கௌரவ வசந்த யாப்பா பண்டார, மற்றும் கௌரவ மஞ்சுளா திசாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.