கொழும்பு,இந்தியா உட்பட ஏழு நாடுகளில் இருந்து, இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு இலவச, ‘விசா’ வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, சமீபகாலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நாட்டின் முக்கிய நிதி ஆதாரமாக விளங்கும் சுற்றுலா துறை, கொரோனா தொற்று காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், அத்துறையை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு சுற்றுலா பயணியரை கவரும் வகையில், விசா நடைமுறையில் பல்வேறு சலுகைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதன்படி இந்தியா, சீனா, ரஷ்யா, மலேஷியா, ஜப்பான், இந்தோ னேஷியா, தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த பயணியருக்கு 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, கட்டணமின்றி விசா வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”இலங்கைக்கு அதிகளவு சுற்றுலா பயணியரை ஈர்க்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
”இது, சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வரும் மேற்கண்ட நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணமின்றி விசா வழங்கப்படும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement