உலகில் பல மோசக்காரர்கள் இருந்தாலும், 1990-களில் நடந்த மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகக் கூறப்படும் நைஜீரியாவைச் சேர்ந்த இம்மானுவேல் நவுட் (Emmanuel Nwude) என்பவரின் மோசடி கதையே வேறு. நைஜீரியாவின் யூனியன் வங்கியின் முன்னாள் இயக்குநரான இம்மானுவேல் நவுட், இல்லாத விமான நிலையத்தை 242 மில்லியன் டாலருக்கு பிரேசில் நாட்டின் பாங்கோ நோரோஸ்டே வங்கிக்கு விற்றுச் செய்த இந்த மோசடி, வங்கி வரலாற்றில் மூன்றாவது பெரிய மோசடியாக இருக்கிறது.

இந்த மோசடிதான் 2001-ல் பிரேசில் பாங்கோ நோரோஸ்டே வங்கியின் சரிவுக்கு வழிவகுத்தது. இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட இம்மானுவேல் நவுட்டுக்கு, அவரது வங்கிப் பின்னணியும், அவரின் மோசடி செய்யத் திட்டமிடும் அறிவும், ஆவணங்கள் தொடர்பான சிக்கல்களைச் சீர்செய்வதற்கு அவருக்கு உதவியது. நைஜீரியாவின் யூனியன் வங்கியின் இயக்குநராகப் பணியாற்றியதால், அவர்மீதான நம்பிக்கை அதிகரித்தது. அதனால் அவரால் எளிதாக ஏமாற்ற முடிந்தது.
இந்த மோசடி திட்டத்தைச் செயல்படுத்த இம்மானுவேல், அப்போதைய நைஜீரியாவின் மத்திய வங்கி ஆளுநராக இருந்த பால் ஓக்வுமாவைப்போல ஆள்மாறாட்டம் செய்தார். மேலும், அவரது கூட்டாளிகள் இம்மானுவேல் ஒஃபோலு, ஒபம் ஒசாக்வே, என்செரிப் ஒகோலி, இகெச்சுக்வுஸ் ஆகியோர் உதவியால் பிரேசிலிய வங்கியின் அப்போதைய இயக்குநராக இருந்த நெல்சன் சகாகுச்சியுடன் எளிதாகத் தொடர்புகொள்ள முடிந்தது.

இருவருக்குமான நட்பால், 10 மில்லியன் டாலர் கமிஷனுக்கு ஈடாக, நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் ஒரு புதிய விமான நிலையத்தைக் கட்டுவதில் முதலீடு செய்யும்படி நெல்சன் சகாகுச்சியை அவரின் மோசடி வலையில் விழவைத்தார். இந்த முதலீட்டின் ஒப்பந்தம் வெற்றிகரமாக இருந்ததால், மொத்த ஒப்பந்தம் 242 மில்லியன் டாலரில், 1995 மற்றும் 1998-க்கு இடையில் 191 மில்லியன் டாலரை ரொக்கமாகவும், மீதமுள்ள 51 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை வட்டியுடன் சேர்த்துச் செலுத்தினார்.
மோசடி மன்னன் இம்மானுவேல் நவுட்டின் எப்படி சிக்கினார் ?
இம்மானுவேல் மற்றும் அவரது குழுவினர் மோசடி செய்துவிட்டுத் தப்பினர். ஆனால், ஸ்பானிய பன்னாட்டு நிதிச் சேவை நிறுவனமான Banco Santander, பிரேசிலிய வங்கியைக் கைப்பற்ற விரும்பியபோது, இம்மானுவேல் நவுட்டின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. 1997-ம் ஆண்டு வங்கியைக் கைமாற்றுவது தொடர்பான கூட்டு விவாதங்களின்போது, ஸ்பானிய வங்கியின் உயர் அதிகாரிகள், ‘பிரேசிலிய வங்கியின் மூலதனத்தின் கிட்டத்தட்டப் பாதி, ஏன் கேமன் தீவுகளில் பாதுகாப்பற்ற கணக்கில் இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்வியில் சிக்கிக்கொண்ட வங்கிக்கும், அபுஜாவில் புதிய விமான நிலையம் இல்லாததால், இந்த முரண்பாட்டைச் சரியாக விளக்க முடியவில்லை. அதன் பிறகே இது தொடர்பான, முறையான விசாரணைகள் தொடங்கப்பட்டன. பிரேசில், நைஜீரியா, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அதிகார வரம்புகளிலும் குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியிருந்தது. நைஜீரியா அரசு இறுதியில் இம்மானுவேல் நவுட்டைக் கைதுசெய்யத் தனிப்படை அமைத்தது.
மறுபுறம், பிரேசிலிய வங்கியின் இயக்குநராக இருந்த நெல்சன் சகாகுச்சி நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார், பின்னர் விசாரணைக்காக சுவிட்சர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், பிரேசிலிய வங்கியின் விற்பனை இன்னும் தொடர்வதை உறுதிசெய்யும் முயற்சியில், வங்கியின் உரிமையாளர்கள் காணாமல்போன 242 மில்லியன் டாலரை தங்கள் சொந்த பணத்திலிருந்து செலுத்த வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், பிரேசிலிய வங்கி இறுதியில் 2001-ல் சீல் வைக்கப்பட்டது.

இந்த மோசடி 1995-1998-க்கு இடையில் நடந்தாலும், நீண்ட சட்ட செயல்முறைக்குப் பிறகு, இம்மானுவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் 2004-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர். வழக்கில் பல்வேறு சிறப்பு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. அவர்கள் முதலில் குற்றமற்றவர்கள் என்று கூறினாலும், இம்மானுவேல் கூட்டாளிகளில் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 25.5 மில்லியன் டாலரைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவுடன் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றார்.
அதையடுத்து இம்மானுவேல் மற்றும் அவரது கூட்டாளிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். முதலில் இம்மானுவேல் EFCC (Economic and Financial Crimes Commission)-ன் தலைவருக்கு 75,000 டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றார். ஆனால் அவர் லஞ்சத்தை ஏற்க மறுத்ததால், இம்மானுவேல் மீது கூடுதல் லஞ்சக் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுப் பாதிக்கப்பட்டவருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. EFCC குழு அமைக்கப்பட்டதிலிருந்து முதல் பெரிய தண்டனை இம்மானுவேலின் தண்டனையாகும்.