ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று சிறுவர்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரயில் மோதிய விபத்தில் சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. வண்டலூர் ரயில் நிலையம் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று காலை மூன்று சிறுவர்கள் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று சிறுவர்களும் பலியாகினர்.
கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜம்பன்னா, மற்றும் அனுமந்தன் குடும்பத்தினர். இவர்கள்,ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். ஜம்பன்னாவின் மகன்களான ரவி (12), மற்றும் சுரேஷ் (15), ஆகியோர் கர்நாடகத்தில் தங்கி இருந்து படித்து வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறையில் பெற்றோரை காண்பதற்காக சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சரியாக பத்து மணி அளவில் ரவி, சுரேஷ் மற்றும் அவர்களது நண்பரான ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்த அனுமந்தப்பா மகன் மஞ்சுநாதன் (11) ஆகிய மூன்று பேரும் தண்டவாளம் அருகில் விளையாடிக் கொண்டே, தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவர்களின் மீது மோதியது. ரயில் மோதிய வேகத்தில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து மின்சார ரயில் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீஸார், விபத்தில் பலியான மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவர்கள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்: ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதிய விபத்தில், பலியான ஜம்பன்னாவின் மகன்களான ரவி மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளிகள் என்பது போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.