ஒன் பை டூ: `டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது' என்ற அமைச்சர் முத்துசாமியின் கருத்து?

சி.டி.ஆர்.நிர்மல்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர், அ.தி.மு.க

“ `தி.மு.க மது விற்பனையை நிறுத்தும்’ என்பது பச்சைப் பொய். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர்கள் அதைச் செய்யப்போவதில்லை. `500 டாஸ்மாக் கடைகளை முடியிருக்கிறோம்’ என்றனர். ஆனால், விற்பனை குறைவான கடைகளை மட்டும் மூடிவிட்டு, இன்னொரு பக்கம் புதிதாகக் கடைகளைத் திறந்துகொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ‘டாஸ்மாக்கை மூடிவிடுவோம். மது உற்பத்தி ஆலைகளை நிறுத்திவிடுவோம். டாஸ்மாக் வருமானத்துக்குப் பதிலாக மாற்றுப் பொருளாதார வழிகளைக் கண்டுபிடிப்போம்’ என்றெல்லாம் இவர்கள் பேசிய வீர வசனங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே அரசே 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனையைச் செய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு சட்டவிரோத மது பார்கள் அரசுக்குத் தெரிந்தே செயல்படுகின்றன. பாட்டிலுக்கு பத்து ரூபாய், பார் வருமானம் என்று தினசரி கோடிக்கணக்கில் பணம் ஆளுங்கட்சியின் மேலிடத்துக்குச் செல்கிறது. தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு, தமிழகத்தில் புதிதாக மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இவர்கள் பணம் சம்பாதிக்க ஒரு சமூகத்தையே மதுவுக்கு அடிமையாக்கிவருகிறார்கள்.’’

சி.டி.ஆர்.நிர்மல்குமார், தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

“அமைச்சர் உண்மையை உணர்ந்து பேசியிருக்கிறார். பத்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க மது விற்பனையைக் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தி.மு.க அரசு முதற்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளைக் குறைத்திருக்கிறது. புதிதாக எந்தக் கடைக்கும் அனுமதி வழங்கவில்லை. அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட முடியாது. அதனால் போதைப் பழக்கத்துக்கு ஆளானோர் மனப்பிறழ்வு, மனநோய் உள்ளிட்ட சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும். இதையெல்லாம் உணர்ந்தே ரூபாய் ஐந்து கோடி செலவில் மாவட்டம்தோறும் மதுவிலிருந்து மீள்வோருக்கான திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது தி.மு.க அரசு. படிப்படியாக மது விற்பனையைக் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முன்னெடுத்திருக்கிறது. மதுவிலக்கில் தி.மு.க எப்போதுமே உறுதியாக இருக்கிறது. ஆனால், அதில் சமூகப் பங்களிப்பும் முக்கியம். அரசுடன் மக்களும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே மதுவை முழுமையாக ஒழிக்க முடியும். கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்து எதுவுமே செய்யாத துப்புக்கெட்ட அ.தி.மு.க., டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க-வை குறைசொல்வது வேடிக்கையாக இருக்கிறது. கையாலாகாத அ.தி.மு.க-வினரின் நாடகங்களை மக்கள் ஒருபோதும் நம்பத் தயாராக இல்லை.’’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.