சியாச்சின்: அக்னிப்பாதை திட்டத்தின் கீழ்தேர்வு செய்யப்பட்டு ராணுவ பயிற்சி பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த வீரர் காவேத் அக்ஷய் லட்சுமண் என்பவர் சியாச்சின் பனிமலைப் பகுதியில் பணியமர்த்தப்பட்டார். இவர் அங்கு ஆபரேட்டராக பணியாற்றினார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். இவரது இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
இதுகுறித்து லே பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் ‘ஃபயர் அண்ட் ஃப்யூரி’ படைப் பிரிவு எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘ சியாச்சின் பனிமலைப் பகுதியில் நாட்டுக்காக கடமையாற்றிய அக்னி வீரர் காவேத் அக்ஷய் லட்சுமணின் உன்னத உயிர் தியாகத்துக்கு ஃபயர் அண்ட் ஃப்யூரி படைப் பிரிவினர் அனைவரும் வீர வணக்கம் செலுத்துகிறோம்’’ என குறிப்பிட்டுள்ளது.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘சியாச்சின் பனிமலைப் பகுதியில் நாட்டுக்காக பணியாற்றிய அக்னி வீரர் காவேத் அக்ஷய் லட்சுமணின் உன்னத தியாகத்துக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் வீரர்களும் வீர வணக்கம் செலுத்துகிறோம்’’ என தெரிவித்துள்ளது.
சியாச்சின் பனிமலைப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ வீரர் ஒருவர்உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.