தைபே,சீனாவில், இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான ராணுவ அமைச்சர் லீ ஷாங்புவை, 65, பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக, அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், சீன கம்யூ., கட்சியின் ஆட்சி நடக்கிறது.
பரபரப்பு
இங்கு வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங், 57, கடந்த ஜூலையில் மாயமானார். இதையடுத்து, சீன வெளியுறவு விவகார கமிஷன் இயக்குனராக இருந்த வாங் யீ, வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதிபர் ஷீ ஜின்பிங்கின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான, ராணுவ அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்புவை, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து காணவில்லை.
கடந்த செப்டம்பரில், அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், மத்திய ராணுவ கமிஷன் கூட்டம் நடந்தது. மிக முக்கிய கூட்டமான இதில், ராணுவ அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்பு பங்கேற்கவில்லை. கூட்டம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான வீடியோவில், ஜெனரல் லீ ஷாங்பு தென்படவில்லை.
இதையடுத்து, ராணுவ அமைச்சர் பதவியில் இருந்து ஜெனரல் லீ ஷாங்பு பதவி நீக்கம் அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் பரவியது.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பின் சீன அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
ராணுவ அமைச்சர் லீ ஷாங்பு மற்றும் வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங் ஆகியோரை பதவியில் இருந்து நீக்க, சீன பார்லிமென்டின் நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிருப்தி
இதேபோல், தற்போதைய நிதி அமைச்சராக உள்ள லீ குன்னுக்கு பதிலாக, நிலைக்குழு உறுப்பினராக உள்ள லான் போன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராணுவ அமைச்சர் லீ ஷாங்புவின் நீக்கத்துக்கு உரிய காரணங்கள் எதுவும் கூறப்படாததுடன், புதிய அமைச்சர் யாரையும் நியமிக்காததும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்காசிய நாடான தைவானுக்கு, அமெரிக்கா ஆயுத உதவிகள் செய்த நிலையிலும், அந்நாட்டு அரசுடன் இணக்கமான சூழலை லீ ஷாங்பு கடைப்பிடித்ததால், சீன அரசு இவர் மீது கடும் அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்