டெல் அவிவ்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் 16வது நாளை எட்டியுள்ள நிலையில் காசாவாசிகளுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். காசாவாசிகள் வடக்கில் இருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் அனைவரையும் ஹமாஸ் ஆதரவு தீவிரவாதிகள் என்றே கருதுவோம் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிவிப்புகளை இஸ்ரேலியப் படைகளின் பெயர் மற்றும் முத்திரையுடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் மூலம் காசா மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. காசாவாசிகளின் மொபைல் எண்களுக்கும் குறுந்தகவல், ஆடியோ மெசேஜ் வாயிலாக இத்தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.
அந்தக் குறுந்தகவலில் இருந்த தகவலின் விவரம் வருமாறு: காசாவாசிகளுக்கு ஓர் அவசர எச்சரிக்கை. காசாவின் வடக்குப் பகுதியில் நீங்கள் இன்னும் இருப்பீர்களானால் அது உங்கள் உயிருக்கு ஆபத்தாகும். காசாவின் வடக்கில் இருந்து தெற்கு காசாவுக்கு செல்ல யாரெல்லாம் மறுக்கிறார்களோ அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளாகக் கருதப்படுவர். இவ்வாறு அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் விளக்கம்: இந்தத் துண்டுப் பிரசுரங்கள் பற்றி இஸ்ரேல் ராணுவம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இது அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான முயற்சி என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பொதுமக்களை தீவிரவாதிகளாகப் பாவிக்கும் உள்நோக்கம் இல்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் விளக்கியுள்ளது. இது வடக்கு காசாவிகள் தெற்கே செல்ல வேண்டும் என்பதற்கான வலியுறுத்தல் மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளது.
நீளும் அமெரிக்க உதவிகள்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் நிலையில் அமெரிக்கா தனது மிகவும் சக்திவாய்ந்த ‘தாட்’ Terminal High Altitude Area Defense (THAAD) எனப்படும் ஏவுகணை உள்ளிட்ட வான்வழித் தாக்குதல் தடுப்பு அமைப்பை அனுப்பிவைக்கிறது.
ஏற்கெனவே இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையும் காசாவுக்குள் நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில் தாட், பேட்ரியாட் போன்ற ஏவுகணைத் தடுப்பு அமைப்புக்ளை அமெரிக்கா அனுப்புகிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான், குவைத், லெபனான், சிரியா எனப் பல நாடுகள் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்க உதவிகள் இஸ்ரேலுக்கு நீண்டு கொண்டே இருக்கிறது.
இந்தச் சூழலில் வடக்கு காசாவில் மக்கள் இருந்தால் உயிர்ப்பலி பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் இஸ்ரேல் ராணுவம் தொடர் எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது.