’லியோ’ பட காட்சிகள் ட்விஸ்ட் அடித்ததைவிட பாடல் ட்விஸ்ட் அடித்திருப்பதுதான் லேட்டஸ்ட் ட்விஸ்ட். ‘நான் ரெடிதான் வரவா’ பாடல்தான் பட ரிலீஸுக்கு முன்பிலிருந்தே மாஸ் ஹிட்.
ஆனால், லியோ பட ரிலீஸுக்குப் பிறகு ‘ஏழையின் சிரிப்பில்’ படத்தில் பாடகர் உன்னிமேனன் – அனுராதா ஸ்ரீராம் பாடிய ‘கரு கரு கருப்பாயி’ பழைய பாடலுக்கு விஜய் டான்ஸ் ஆடியிருப்பதுதான் ட்விட்டர், யூ-டியூப், கிரிக்கெட் ஸ்டேடியம் என எல்லா இடத்திலும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வைரலாகிவருகிறது.

’கரு கரு கருப்பாயி’ பாடல் வெளியாகி 20 வருடங்களுக்கு மேலாகிறது. பிரபுதேவா, ரோஜா இருவரும் செம்ம டான்ஸ் ஆடியிருப்பார்கள். பாடலும் அப்போதே செம்ம ஹிட். இப்போது, இத்தனை வருடங்களுக்குப்பிறகும் உன்னிமேனனின் குரலில் வெளியான அந்தப்பாடல் விஜய்யால் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருப்பதை எப்படி உணர்கிறீர்கள்? என்று பாடகர் உன்னிமேனனிடம் கேட்டோம், கனடாவிலிருந்து நம்மிடம் பேசினார்,

“கரு கரு கருப்பாயி பாட்டுக்கு விஜய் சார் டான்ஸ் ஆடினது ரொம்ப சந்தோஷம். இந்த பாட்டைத் தேர்ந்தெடுத்து ’லியோ’ படத்தில் காட்சிப்படுத்திய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை வருஷம் கழிச்சு இந்தப் பாடல் இப்போ இவ்ளோ வைரல் ஆகும்னு நினைச்சுக்கூட பார்க்கல.
நான், தேவா சார் படத்துல நிறைய பாட்டு பாடியிருக்கேன். அப்படித்தான், ‘ஏழையின் சிரிப்பில்’ வாய்ப்பும் வந்துச்சு. அந்தப் படத்துல, மூணு பாட்டு பாடியிருக்கேன். ஆனா, ‘கரு கரு கருப்பாயி’ ஹிட் ஆகிடுச்சு. இந்தப் பாட்டு கொஞ்சம் ஜாலியானது. அதனால, பாடும்போதே நானும் அனுராதா ஸ்ரீராமும் ரொம்ப ஃபன் பண்ணிக்கிட்டே பாடினோம். பிரபுதேவா- ரோஜா நல்லா டான்ஸ் பண்ணியிருப்பாங்க. அப்பவே, பாட்டு ஹிட்டுத்தான். ஆனா, அப்போ, சோஷியல் மீடியால்லாம் கிடையாது. இப்போ இருக்கு. அதனால, பெரிய ஹிட் ஆகியிருக்கு. எனக்கு பயங்கர மகிழ்ச்சிதான்.

’லியோ’ படத்துல அந்த பாட்டை பார்த்துட்டு உலகம் முழுக்க எல்லா இடத்திலிருந்தும் மெசேஜா அனுப்பி குவிக்கிறாங்க. அதுவும், இந்தப் பாட்டுக்கு அடிக்ட் ஆகிட்டதா மெசேஜ் அனுப்புறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ நான், கனடாவுக்கு ஷோவுக்காக வந்திருக்கேன். அங்க இருக்கிறதால படம் பார்க்க முடியல. எல்லோரும் மெசேஜ் அனுப்பி எக்ஸைட்மெண்டை அதிகப்படுத்திட்டாங்க. இந்தியா வந்ததுமே ’லியோ’ படம்தான் பாப்பேன். விஜய் சாருக்கு ’ஷாஜகான்’ படத்துல ‘மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து’ன்னு நான் இதுவரைக்கும் ஒரே ஒரு பாட்டுதான் பாடியிருக்கேன். பிரமாதமான வரிகள் அவை.
சென்னை ஏர்போர்ட்டுல விஜய் சாரை ஒருமுறை பார்த்தப்போ, அவர வந்து கேஷுவலா பேசினார். ’உங்களுக்கு ஒரே ஒரு பாட்டுத்தான் பாடியிருக்கேன்’னு சொன்னேன். ’மின்னலைப் பிடித்து’ அவருக்கு ரொம்ப புடிச்ச பாட்டுன்னு சந்தோஷப்பட்டு சொன்னார். அதுக்கப்புறம், நான் அவரை பார்த்ததும் இல்ல, பேசினதும் இல்ல. இப்போ, ’கரு கரு கருப்பாயி’ மூலமா அவருக்கு இரண்டாவது பாடலை படின மாதிரி உணர்றேன்” என்று பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவரிடம், உங்களது வசீகரக்குரலில் ரோஜா படத்தில் ‘புது வெள்ளை மழை’ பாடல் இப்போதும் பாடப்படும் பாடல். ‘ரோஜா’ படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகப்போகிறது, எப்படி இருக்கு? என்று நாம் கேட்டபோது,

“ரஹ்மான் சார் மியூசிக்குல 27 பாடல்கள் படியிருக்கேன். ‘புது வெள்ளை மழை’ மட்டுமில்ல, ’கண்ணுக்கு மை அழகு’, ‘போறாளே பொன்னுத்தாயி’, ’மெல்லிசையே’, ‘பூங்காற்றிலே’, ‘என்ன விலை அழகே’,’காதல் கடிதம்’,’நதியே நதியே’, ’சந்திப்போமா’ன்னு நிறைய பாடல்கள் எல்லாம் பாடியிருக்கேன். சிற்பி இசையில் ’எங்கே அந்த வெண்ணிலா’ பாடல் பாடியதற்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது. ’கோகுலம்’ படத்தில் ‘செவ்வந்திப் பூ எடுத்தேன்’ பாட்டு ரீசண்ட்டா வைரலாச்சு. அதேபோல, தேவா சார் மியூசிக்ல ‘முகவரி’ படத்துல ‘ஏ நிலவே.. ஏ நிலவே’ எல்லாம் ஹிட்.
நான் பாடின எல்லா பாட்டுமே பிடிக்கும்னாலும், தமிழ் படத்தில் நான் பாடியதிலேயே எனக்கு மிகவும் மனதுக்கு நெருக்கமான, பிடித்த பாடல் என்றால், ’உயிரே’ படத்தில் வரும் ‘பூங்காற்றிலே உன் சுவாசத்தை’ பாடல்தான். நிறைய பாராட்டுகள் அந்த பாட்டுக்கு கிடைச்சது” என்று நினைவுகூர்ந்தவரிடம், “தற்போது ஏன் தமிழ் சினிமாவில் பாடுவதில்லை? ஏன் இந்த இடைவெளி?” என்றபோது, “இளைஞர்கள் நிறைய பாடுறாங்க. அவங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரட்டும். ஆனாலும் இசை நிகழ்ச்சிகளில் நான் பிசியாகத்தான் இருக்கேன்.

தமிழ் இசையமைப்பாளர்கள் கூப்பிட்டா நான் என்ன மறுக்கவா போறேன்? நாலஞ்சு மாசத்துக்கு முன்னால ரஹ்மான் கூப்பிட்டாரு. அவர் அழைத்த நாள் இரவுதான் அயர்லார்ந்துல ஒரு இசை நிகழ்ச்சிக்கு போறதா இருந்துச்சு. அதனால, வர முடியல. மற்றபடி இப்போக்கூட ’காதல் வேகம்’ படத்துல பாட்டு பாடியிருக்கேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. நமக்குன்னு ஒரு பாட்டு இருக்குன்னா அது நிச்சயமா நம்பள தேடிவரும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்கிறார் கேஷுவலாக.