ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு காரணமே ஜடேஜா தான் – சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

இந்த உலக கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்களின் புருவத்தை உயர வைத்திருக்கிறது ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டம். உலக சாம்பியன் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து இந்த உலக கோப்பையில் சாய்த்து புள்ளிப் பட்டியலிலும் 6வது இடத்தில் இருக்கிறது. இதற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு அஜய் ஜடேஜாவும் காரணம் என பாராட்டியுள்ளார். “இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் ஆட்டம் சிறப்பானதாக உள்ளது. பேட்டிங்கில் அவர்களின் கட்டுக்கோப்பு, அவர்கள் வெளிப்படுத்திய நிதானம் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே ஆக்ரோஷமாக ஓடுவது அவர்களின் கடின உழைப்பை பிரதிபலிக்கிறது. 

இது அஜய் ஜடேஜாவின் செல்வாக்கின் காரணமாக இருக்கலாம் ” என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்தில் உண்மை இருப்பதாகவே கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் அணியை கத்துக்குட்டி அணி என்று பார்த்துக் கொண்டிருந்தபோது, நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தனர். அடுத்ததாக பாகிஸ்தான் அணியையும் அந்த அணி வீழ்த்தியபோது தான், ஆப்கானிஸ்தான் அணியை எல்லோரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு முக்கிய காரணம் அஜய் ஜடேஜா தான். 

 October 23, 2023

உலக்கோப்பைக்காக சிறப்பு ஆலோசகராக அவரை ஆப்கானிஸ்தான் அணி நியமித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜய் ஜடேஜா 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசியில் இறங்கி அதிரடியாக ஆடினார். 25 பந்துகளில் 45 ரன்களை 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் எடுத்ததால், இந்திய அணி வெற்றி பெற்றது. பவுலிங்கிலும் அப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார் அஜய் ஜடேஜா. அவரின் அனுபவம் இப்போது ஆப்கானிஸ் தான் அணியை உலக கோப்பையில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. அந்த அணி இன்னும் சில போட்டிகளில் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது எழுந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.