புதுடில்லி: ஆயுதப்படையின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக ஏர் மார்ஷல் சாதனா சக்சேனா நாயர் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை விமானப்படை பிறப்பித்துள்ளது. இதன் மூலம், அப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
அதேபோல், ஏர் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்ட இரண்டாவது பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சாதனா சக்சேனா, புனேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று 1985 ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார். குடும்ப மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவர், டில்லி எய்ம்ஸில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளார். மேற்கு விமான மற்றும் பயிற்சிப் படையின் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணியாற்றி முதல் மற்றும் ஒரே ஒரு பெண் அதிகாரி இவர் ஆவார். இந்திய விமானப்படையின் விசிஷ்ட சேவா பதக்கம் உட்பட பல பதக்கங்களை பெற்றுள்ளார். இவரது கணவர் கே.பி.நாயர், ஏர் மார்ஷலாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இதனால், விமானப்படையில் ஏர் மார்ஷலாக பதவி வகித்த முதல் மற்றும் ஒரே தம்பதி என்ற பெருமை இவர்களுக்கு கிடைத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement