ஈரோடு: “ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியது: “ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் மூலம், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற நபர், சில மாதங்களுக்கு முன்பு கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் ஆவார். தமிழகத்தில் உளவுத்துறை எந்த அளவிற்கு கோட்டை விடுகின்றது என்பதற்கு இது உதாரணம்.
கொடிக்கம்பம் நடுவதை தடுப்பதில், சமூக வலைத்தளங்களில் பணியாற்றுபவர்களைக் கைது செய்வதில் முனைப்பு காட்டும் காவதுறை, இதுபோல் தொடர் குற்றச் செயலில் ஈடுபவரை கண்காணிப்பதில்லை. இனிமேல், அரசையும் காவல் துறையும் நம்பி பிரயோஜனம் இல்லை. தமிழக மக்கள் ஆண்டவனை தான் வேண்டிக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது காவல்துறைக்கு அதிகாரத்தை கொடுத்து இது போன்ற குற்றச்சம்பங்களை தடுப்பாரா? திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரை விடுவித்து, ஒரு சாமானிய மனிதனினுக்கு நம்பிக்கையும் மரியாதையும் வரும் அளவிற்கு நடத்த வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பாகும்.
உச்சபட்ச அதிகாரம் உள்ள ஆளுநர் மாளிகையின் முன்பாக இதுபோன்ற சம்பவம் நடைபெறுகிறது என்றால், சாதாரண மக்களுக்கும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்பது தான் கேள்வி. ஒரு தொடர் குற்றவாளியை உளவுத்துறையால் கண்காணித்து, பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்றால் சிறு நகரங்கள் கிராமங்களில் எவ்வாறு பாதுகாப்பு வழங்குவார்கள்” என்று தெரிவித்தார்.