ஆளுநர் மாளிகை சம்பவம் | தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்

சென்னை: சென்னை – கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த தாக்குதலுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவரும், எம்எல்ஏவுமான எம்.எச்.ஜவாஹிருல்லா
வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அரசால் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, ஆளுநருக்கு அந்த கோப்பு அனுப்பப்பட்டது. 2 மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்தக் அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நேற்று ஆளுநர் மாளிகை அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தவுள்ள ஜனநாயகப் போராட்டத்தை திசைச் திருப்பும் விதமாக இதுபோன்ற சம்பவத்தை சமூக விரோதிகள் சதி செய்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.

பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை மட்டும் கைது செய்யாமல், அவருக்கு பின்னணியில் உள்ளவர்களையும் தமிழகக் காவல் துறை விசாரித்து விரைவில் கைது செய்ய வேண்டும்.

கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இயங்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை கட்டுக்கோப்புடன் திட்டமிட்டபடி 28 -ம் தேதி மாலை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.