சென்னை: “ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில் பேரிகார்டு அருகே விழுந்து உடைந்ததுவிட்டதால், அதிலிருந்து தீ வரவில்லை” என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்று நண்பகல் 3 மணிக்கு, சர்தார் படேல் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராஜ்பவன் நுழைவு வாயில் பகுதியை குறிவைத்து, பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசுவதற்கு முயற்சித்தார். அப்போது அங்கு முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த நபரை பார்த்துவிட்டதால், அந்த நபர் எதிர் திசையில் உள்ள ஹைவே ரிஸர்ச் சென்டர் என்ற பகுதியில் இருந்து அந்த பாட்டிலை வீச முயற்சித்தார். அப்போது பிரதான நுழைவு வாயில் பகுதியிலும், வெளியிலும் இருந்த காவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர்.
அந்த நபரை போலீஸார் பிடித்தபோது, ஒரு பாட்டிலை வீசினார். அதிலிருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை. அந்த பாட்டில் அப்படியே உடைந்து கிடக்கிறது. அவரை பிடித்தபோது, மேலும் 4 பாட்டில்கள் அவரிடம் இருந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்துவிட்டனர். இந்தச் சம்பவம் சர்தார் படேல் பிரதான சாலையில் நடந்தது. அங்கிருந்து வீசும்போது, ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பிருந்த பேரிகார்டு முன்பாக விழுந்தது. இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.
அந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தபோது, அந்த நபர், 42 வயதுடைய கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதே மாதிரி, ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தின் மீது, இதேபோன்ற பாட்டிலை வீசியுள்ளார். அதற்கு முன்னதாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இதே மாதிரியான சம்பவம் செய்துள்ளார்.
அண்மையில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். இன்று காலை 10-11 மணிக்கு மது அருந்தியுள்ளார். சம்பவத்தின்போது அவர் நிதானத்தில் இல்லை. எனவே, அவரை மிகுந்த எச்சரிக்கையுடன் பிடித்து, அவரிடமிருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தோம். காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைக்குப் பின்னர், முழு விவரம் தெரியவரும்” என்று அவர் தெரிவித்தார்.