வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இதுவரை காசாவில் 5,087 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் கொடூரமான தாக்குதலை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக பாலஸ்தீன மக்களை தண்டிப்பதை நியாயப்படுத்த முடியாது என ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர், 18வது நாளாக நீடிக்கும் நிலையில் பலி எண்ணிக்கை, 7 ஆயிரத்தை கடந்தது. வடக்கு காசாவில் இருந்து உடனடியாக வெளியேறி தெற்கு காசாவுக்கு செல்ல பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், காசாவில் 5,087 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, 2,055 குழந்தைகள், 1,119 பெண்கள், 217 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 15,273 பேர் காயம் அடைந்துள்ளனர் காசா சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 1,400 பேர் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீனர்களின் குறைபாடுகளை கூறி ஹமாஸ் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.
அதேபோல ஹமாஸின் கொடூரமான தாக்குதலை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக பாலஸ்தீன மக்களை தண்டிப்பதையும் நியாயப்படுத்த முடியாது. இவ்வாறு அந்த பதிவில் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
பதவி விலகணும்
இதற்கிடையே ஐ.நா பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் பதவி விலக வேண்டும் என ஐ.நா.,வில் இஸ்ரேல் நிரந்தர பிரதிநிதி கிலாட் எர்டன் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஐ.நா., இஸ்ரேல் இடையே மோதல் வலுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement