ஊரப்பாக்கம்: சென்னை ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாற்றுத் திறன் சிறுவர்கள், மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருபவர்கள் அனுமந்தப்பா, ஜம்பன்னா சகோதரர்கள். இவர்கள் கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியை சேர்ந்தவர்கள்.
ஜம்பன்னாவின் மகன்களான ரவி (12), சுரேஷ் (15), அனுமந்தப்பாவின் மகன் மஞ்சுநாத் (11) ஆகியோர் கர்நாடகாவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தனர். தற்போது தசரா விடுமுறை என்பதால், பெற்றோரை பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் ரவி, சுரேஷ், மஞ்சுநாத் ஆகிய 3 பேரும் தண்டவாளம் அருகே விளையாடியுள்ளனர். ஆபத்தை அறியாமல் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது. இதில், மூன்று சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டு கை, கால்கள், சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீஸார், 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கர்நாடகாவை சேர்ந்த இந்த 3 சிறுவர்களில் அண்ணன், தம்பியான சுரேஷும், ரவியும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள். மஞ்சுநாத் வாய் பேச முடியாதவர்.
ரயில் மோதிய விபத்தில், மாற்றுத் திறன் சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.