பெங்களூரு : புலி நக லாக்கெட் அணிந்து, கன்னட ‘பிக்பாஸ்’ போட்டியாளர் வர்த்துார் சந்தோஷ் கைதாகி சிறையில் அடைபட்டிருக்கிறார். இதே போன்று, நடிகர் தர்ஷன், தயாரிப்பாளர் ‘ராக்லைன்’ வெங்கடேஷ், பிரபல ஜோதிடர் வினய் குருஜி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
விவசாயம் தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வர்த்துார் சந்தோஷ், கன்னட ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
இவர் தன் கழுத்தில் புலி நகம் இருந்த லாக்கெட் தங்க செயின் அணிந்திருந்தார். தகவலறிந்த வனத்துறையினர், பிக்பாஸ் வீட்டிலிருந்த அவரை கைது செய்தனர்.
அவர் அணிந்திருந்தது உண்மையான புலி நகம் என்பது உறுதியானது. தற்போது அவர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் தர்ஷன், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், பிரபல ஜோதிடர் வினய் குருஜியும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இவர்கள் மூவரும், தங்கள் கழுத்தில் புலி நகம் போட்ட ‘டாலர்’ அணிந்துள்ளனர். பிரபல ஜோதிடர் வினய் குருஜி, புலித்தோல் மீது அமர்ந்துள்ளார். இவர்களின் போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி, சர்வ சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் நாயக், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரிடம், புகார் செய்துள்ளார். இதன்படி போலீசார், அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement