இந்தியாவில் தசரா வழிபாட்டின் போது பெண்களெல்லாம் தங்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபாடுவார்கள். கொலுவில் பொம்மைகளும் சாமி சிலைகளுமே நிரம்பியிருக்கும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக தான் சேகரித்த 95 வகையான நெல் ரகங்களை கொலுவில் அடுக்கியிருக்கிறார் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த இயற்கை விவசாயி லெட்சுமி தேவி.

இது குறித்து அவரிடம் பேசும்போது, “எங்க குடும்பம் விவசாயக் குடும்பம் இல்ல. எங்க வீட்டுல எல்லாரும் ஆசிரியரா வேலை பார்த்தவங்க. எனக்கு சின்ன வயசுல படிக்கும்போதே விவசாயத்து மேல ஈர்ப்பு இருந்துச்சு. பிஸ். எஸ். என். எல்-ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது உடம்புக்கு நிறைய பிரச்சனை வந்ததால வீ. ஆர். எஸ் வாங்கிட்டு வீட்ல இருந்தேன். நஞ்சு உணவுகளை சாப்புடுறனால தான் உடம்புக்கு பலவிதமான நோய்கள் வருது.
ஏன் நம்ம இயற்கை விவசாயம் பண்ணி நல்ல உணவுகளை விளைவிக்க கூடாதுன்னு தோணுச்சு. வீட்டுல உள்ளவங்களோட சப்போர்ட்டுல அரை ஏக்கர் நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். எரு, இலைதழைகள் போட்டு தஞ்சாவூர்ல இருந்து பெருமாள்னு ஒருத்தர் மூலமா பாரம்பரிய நெல் வகைகள் கிடைச்சது. அதை வாங்கி பயிர் செய்தோம்.

எங்களுக்கு முதல் 3 வருஷம் குறைவான மகசூலே கிடைச்சது. மண் சரியாவதற்கு 3 வருஷம் ஆச்சு. அதுக்கு அப்புறம் நல்ல விளைச்சல் கிடைச்சது. நாங்க நிலத்தை பராமரிக்கிறதை பார்த்துட்டு பக்கத்து நிலத்துக்காறங்க எங்ககிட்டயே நிலத்தை விக்கிறதுக்கு முன்வந்தாங்க. இப்ப என்கிட்ட 95 வகையான பாரம்பரிய நெல் விதைகள் இருக்கு. 9 ஏக்கர் நிலம் வச்சிருக்கேன்.
ஒவ்வொரு வகையான நெல் விதைகள் கிடைக்கும்போதும் நிலத்துல பயிரிட்டு பார்ப்பேன். விளைஞ்ச நெல்ல அரிசியாக்கி முதல்ல நாங்களே அதை சாப்பிடுவோம். பிறகுதான் விற்பனை செய்வோம். நெல் விதைகளை தெரிஞ்சவங்க, பேஸ்புக் மூலமாகத்தான் சேகரிக்கிறேன். பாரம்பர்ய நெல்விதைகளோட பெயர்களை சங்க இலக்கியத்துல இருந்து எடுத்துப்பேன். எல்லார் கிட்டயும் நெல்லோட பெயர் சொல்லி கேட்பேன். நெல் விதைகள் கிடைக்க கிடைக்க அப்பப்போ பயிரிடுவேன்.

எனக்கு விவசாயம் தெரியாது. புத்தகங்கள் மூலமாகவும் அனுபவங்கள் மூலமாகவும்தான் கத்துகிட்டு இருக்கேன். என் நிலத்துல வேலைபாக்கிறவங்க இந்தம்மா தேவை இல்லாம பண்ணிட்டு இருக்குன்னு பேசுறதை கேட்டிருக்கேன். ஆனா, இப்போ எனக்கு நிறைய சப்போர்ட் பண்றாங்க. ஒவ்வொரு பாரம்பரிய நெல்லுக்கும் ஒரு பயன் இருக்கு. மிளகு சம்பா உடம்புக்கு நல்லதுன்னு அகத்தியரே சொல்லிருக்கார். வீதிவிடங்கன், கறுப்புக்கவுனி, கொல்லஞ் சம்பா, மிளகு சம்பா என பலவகை நெல் ரகங்கள் இருக்கு. இயற்கை விவசாயமானது லாப நோக்கித்திற்கானது அல்ல. அதன் நோக்கமெல்லாம் நல்ல உடல்நலம்தான். இதை எல்லாரும் புரிஞ்சிக்கிட்டு இயற்கை விவசாயத்தை நோக்கி வரணும். அதுக்காகத்தான் கொலுவுல பொம்மைகளோடு பாரம்பர்ய நெல் விதைகளையும் வெச்சேன்” என கோரிக்கை விடுக்கிறார் லெட்சுமி தேவி.