விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் பஞ்சாயத்தில் கடந்த 2-ம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கேள்விகேட்ட விவசாயி அம்மையப்பனை, பிள்ளையார்குளம் ஊராட்சிச் செயலாளர் தங்கபாண்டியன் காலால் மார்பில் எட்டி உதைத்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியனின் செயலுக்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, விவசாயி அம்மையப்பனை தாக்கியது தொடர்பான வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தங்கபாண்டியன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, மனுவை விசாரித்த நீதிமன்றம், தங்கபாண்டியனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில், தகராறொன்றில் நபரை இடைமறித்து தாக்கிய வேறொரு வழக்கில் ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் இன்று கைதுசெய்யப்பட்டார். இது குறித்து போலீஸிடம் கேட்டபோது, “ராஜபாளையம் அருகே ஆண்டாள்புரத்தைச் சேர்ந்தவர் ரவிசேகர், கூலி வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி புவனா என்ற புலியூரான். இவர், பிள்ளையார்குளம் ஊராட்சியில் நூறு நாள்கள் வேலைத்திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார். இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், 2018-ம் ஆண்டு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், புவனாவுக்கு ஆதரவாக ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன் தலையிட்டு ரவிசேகரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் உயிருக்கு பயந்துபோன ரவிசேகர், பிழைப்பு தேடி கோயம்புத்தூருக்கு வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மகன்களை பார்ப்பதற்காக ரவிசேகர் மீண்டும் தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் ரவிசேகர் நின்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியன், அவரிடம் மீண்டும் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, வாய் தகராறு ஏற்பட்டதில் ‘உன்னை ஊருக்குள் வரக் கூடாதுனு சொல்லியும், மீண்டும் நீ ஏன் ஊருக்கு வந்தாய்’ எனக் கூறியவாறே ரவிசேகரை, தங்கபாண்டியன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயமுற்ற ரவிசேகர், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ரவிசேகர், வன்னியம்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவுசெய்து ஊராட்சிச் செயலர் தங்கபாண்டியனைக் கைதுசெய்தனர்” எனக் கூறினர்.