ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள `ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படம் கார்த்தியின் 25வது படம் என்பதால் இப்படத்திற்கான இசைவெளியீட்டு விழா வரும் அக்டோபர் 28ம் தேதி பெரிய அளவில் நடைபெறும் என்று கூறியுள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
இது பற்றிச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இப்படம் கார்த்திக்கு 25வது படம். இதைக் கொண்டாட அவரின் சினிமா பயணத்தை எடுத்துக்காட்டும் விதமாக வரும் அக்டோபர் 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இசை வெளியீட்டு விழாவிற்கு அரசிடமிருந்து முறையாக அனுமதி வாங்கப்பட்டுவிட்டது. அவர்களும் உரியப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறினார்கள். ‘லியோ’விற்கு ஏன் அனுமதி கிடைக்கவில்லை என்று எனக்குத் தெரியாது, அது அவர்களுக்குத்தான் தெரியும். மொத்தம் 7,000 பேர் வரை அந்த அரங்கில் அமரலாம். அதற்கு ஏற்ப டிக்கெட்களைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
‘லியோ’ திரைப்படத்தில் கெட்டவார்த்தை இடம் பெற்றிருந்தது. அது கதைக்குத் தேவை என்பதால் அவர்கள் அதைப் படத்தில் வைத்திருக்கலாம். பிறகு, சென்சார் போர்டு அதை நீக்கியது. படைப்பாளிக்குச் சுதந்திரம் வேண்டும். அதேசமயம், சென்சார் போர்டுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி படைப்பாளிக்கும் ஒரு பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.
‘ஜப்பான்’ படத்தைப் பொருத்தவரை தீபாவளிக்கான கொண்டாட்டம், பத்திரிகையாளர் மற்றும் இயக்குநரான ராஜுமுருகனின் சமூக கருத்து என அனைத்துமே இப்படத்தில் இருக்கும்.

நாளுக்கு நாள் திரையரங்குகள் குறைந்துகொண்டே வருகின்றன. திரையரங்கெல்லாம் திருமண மண்டபங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஓ.டி.டி-யிலும் படங்கள் வெளியாகின்றன. திரையரங்கினருக்கு வருமானம் போதவில்லை. இதைச் சமாளிக்க டிக்கெட் விலையில் கைவைக்க முடியாது, அதனால்தான் திரையரங்கத்தினர் தின்பண்டங்களின் விலையை அதிகரிக்கின்றனர்” என்று பேசியுள்ளார்.