Thalapathy 68: `விஜய் படத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி பட நடிகை'; யார் இந்த மீனாக்ஷி சௌத்ரி?

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் ‘தளபதி 68’ படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  ‘புதிய கீதை’ படத்திற்கு பிறகு, விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின்  பூஜை வீடியோ வெளியானது.  இந்த வீடியோவில் யார் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாக்ஷி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். தவிர, வெங்கட் பிரபு படத்தில் வரும் ஆஸ்தான நடிகர்களான வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் இருக்கிறார்கள்.

மீனாக்‌ஷி செளத்ரி

இதில் நடிகை மீனாக்ஷி சௌத்ரி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் பலரும் யார் இந்த மீனாக்ஷி சௌத்ரி என்று சமூக வலைதளங்களில்  தேடி வருகின்றனர். விஜய்யின் 68 வது  படத்தில் நடிக்கும் மீனாக்ஷி சௌத்ரி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையான இவர் 2018 ம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் பட்டத்தை வென்றிருக்கிறார்.

இளங்கலையில் டென்டல் சர்ஜரி படித்து முடித்திருக்கிறார். மாடலான இவர் முதன் முதலில் ‘Out of love’ என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அதன் பிறகு பட வாய்ப்புகள் வர தெலுங்கில் 2021 ஆம் ஆண்டு வெளியான  ‘இச்சாட வாகனமுலு நிலுப ராடு’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி  இருக்கிறார். அதன் பின், ரவி தேஜாவுடன் ‘கில்லாடி’ என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு, நானி தயாரித்த ‘HIT – The Second Case’ படத்தில் அத்வி சேஷுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படம் பிரமாண்ட வெற்றியடைந்தது. டோலிவுட்டில் பிஸியாக இருந்தபோதே, தமிழில் இருந்து வந்த அழைப்புதான், ‘கொலை’. பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இப்படத்தின் மையமே இவரது கொலைதான். படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், பிரபல மாடலாக இவரது நடிப்பு அந்தப் படத்தில் பேசப்பட்டது.

மீனாக்‌ஷி செளத்ரி

தெலுங்கில் ‘ஹிட்’ படம் சூப்பர்ஹிட்டாக, விஸ்வாக் சென்னுக்கு ஜோடியாக ஒரு படம், வருண் தேஜுடன் நடிக்கும் ‘மட்கா’ என்ற மல்டிலிங்குவல் படம் என அடுத்தடுத்து குவிந்தன வாய்ப்புகள். ‘அலா வைகுந்தபுரமுலோ’ பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் ‘குண்டூர் காரம்’ படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பதில் இணைந்தார் மீனாக்‌ஷி. தவிர, வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்திலும் மீனாக்‌ஷிதான் நாயகி.

இப்படி தெலுங்கில் பயங்கர பிஸியாக இருக்க, தமிழில் இருந்து அடித்திருக்கிறது ஜாக்பாட். ‘தளபதி 68’ படத்தில் இணைந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் ” ‘தளபதி 68’ படத்தில் நடிப்பது கனவு போல் உள்ளது. விரைவில் இந்த மேஜிக்கை நீங்கள் அனைவரும் திரையில் காண, நான் ஆர்வமாக உள்ளேன்” என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.  

கலக்குங்க மீனாக்ஷி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.