Alert World Cup 2023 Fake Ticket: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களை கூகுளில் போலி இணையதளங்கள் மூலம் மோசடி செய்து ஏமாற்றி வருகின்றனர். இதுக்குறித்து பல புகார்கள் வந்ததையடுத்து, இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் பிரிவு விசாரிக்க உத்தரவிடப்பட்டது. எனவே தற்போது இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியை காண டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சமூக ஊடகங்களில் விளம்பரம் -ஜாக்கிரதை
இந்த இணையதளத்தில் ரூ.2,000 முதல் ரூ.18,790 வரையிலான விலையில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தரவுகளைச் சேகரித்து, கொடுக்கப்பட்ட முகவரிக்கு டிக்கெட்டுகளை முன்கூட்டியே டெலிவரி செய்வதாக உறுதியளித்து உங்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. அதடனுடன் டிக்கெட் விலையும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்களும் இணைப்புகள் மூலம் இதை விளம்பரப்படுத்துகின்றன. மறுபுறம், உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் இந்த தளம் போலியானது என்று கூறியுள்ளது.
உலகக் கோப்பை 2023 டிக்கெட் முன்பதிவு: ஐசிசியின் போலி இணையதளம்
அக்டோபர் 29-ம் தேதி லக்னோவில் நடைபெறவுள்ள இந்தியா-இங்கிலாந்து இடையேயான போட்டியை பார்க்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற மக்கள் ஒரு மாதமாக காத்திருக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி, மோசடி செய்பவர்கள் ஐசிசியின் போலி இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். அந்த தளத்திற்கு சென்றால், அனைத்து உலகக் கோப்பை போட்டிகளுக்கும் டிக்கெட் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது.
டிக்கெட் போலியானது என்பது எப்படி தெரியும்?
உலகக் கோப்பை 2023 போட்டியை காண ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய கூகுளில் இருந்த போலி இணையதளம் மூலம் பெரும் தொகையை செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்த டிக்கெட்டை பிரின்ட் அவுட் எடுத்து பார்த்தபோது, அந்த டிக்கெட் போலியானது என்பது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து புகார்கள் வந்ததை அடுத்து, சைபர் கிரைம் பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் போயாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்
இந்த சம்பவம் குறித்து உ.பி. இணை போலீஸ் கமிஷனர் உபேந்திர அகர்வால் கூறுகையில், அந்த இணையதளத்தை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரியவந்தது. இது குறித்து பிசிசிஐயுடன் சேர்ந்து ஐசிசிக்கு மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்ய கூகுளில் தேட வேண்டாம் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள் எனவும் கோரிக்கை வைத்தார்.
போலி இணையதளத்தில் 2 முதல் 20 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனை
மோசடி நபர்களின் போலி இணையதளம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில் மூன்று வகை டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளன. முதல் வகுப்பில் இரண்டு முதல் நான்காயிரம் ரூபாய் வரை டிக்கெட் கிடைக்கிறது. அதன்பிறகு ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இறுதியாக 8500 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்கின்றனர். எந்தெந்த பிரிவில் எத்தனை டிக்கெட்டுகள் மீதம் உள்ளன என்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி இணையதளம் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்
இதுமட்டுமின்றி டிக்கெட் விலையில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றி பணத்தை பறித்து வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு செய்த பின், Paytm மற்றும் UPI மூலம் பணத்தை எடுத்து கொள்கின்றனர். இந்த போலி இணையதளம் அல்ல என்பதைக் காட்டிக்கொள்ள, அவ்வப்போது இடையில் டிக்கெட் விற்பனையை கூட நிறுத்தி விடுகிறார்கள். எனவே கிரிக்கெட் ரசிகர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.