டெல்லி: உலகமயமாக்கப்பட்ட பல்வேறு மோதல்களின் விளைவுகள் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் உடனடியாக பரவுகின்றன என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் – ரஷ்யா போர் ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்துவரும் நிலையில், தற்போது ஹமாஸ் – இஸ்ரேல் போர் கிளம்பியிருக்கிறது. காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, அங்கு இருதரப்பு மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். காசாவில் 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பயங்கரவாதத்தின் விளைவுகளை இந்தியா கண்டித்து வருகிறது. அதோடு, இந்தியா சமாதானம், அமைதி என நடுநிலைமையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் இன்று (அக்.22) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “உலகளமயமாக்கப்பட்ட புவியில் பயங்கரவாதத்தின் தாக்கத்தை இனியும் பாதிக்கப்பட்ட ஒரே பகுதிக்குள் கட்டுப்படுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு சாத்தியமற்றது என்று தோன்றுகிறது. பூகோள அரசியல் எழுச்சி நிலைகளை நாம் காணும்போது, மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது, அதன் தாக்கம் என்ன வகையாக இருக்கும் என்பதை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை.
உலகமயமாக்கப்பட்ட பல்வேறு மோதல்களின் விளைவுகள் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் உடனடியாக பரவுகின்றன, உதாரணமாக ரஷ்யா-உக்ரைன் போரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இங்கே பயங்கரவாதம் என்பது கருவியாக, ஆட்சிக்கலையாகப் பயன்படுத்தப்படுகிறது.
பயங்கரவாதம் என வரும்போது நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அதன் பரவும் தன்மை மிகுந்த தீவிரமுடையது. பயங்கரவாதத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனால் விளையும் எந்தவித ஆபத்தும் நமக்கு வெகு தூரத்தில் இல்லை என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.