புதுடில்லி, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவை, சட்டக் கமிஷன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி நேற்று சந்தித்து பேசினார்.
நம் நாட்டில் லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து, சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்தக் குழுவில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அர்ஜுன் ராம்மேக்வால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த உயர் மட்டக் குழுவின் முதல் கூட்டம், புதுடில்லியில் சமீபத்தில் நடந்தது.
இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவை, சட்டக் கமிஷன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் அதன் உறுப்பினர்கள், புதுடில்லியில் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து, உயர்மட்டக் குழுவுக்கு, சட்டக் கமிஷன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, 2029 லோக்சபா தேர்தலுடன், மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த, மாநில சட்டசபைகளின் ஆட்சி காலத்தை கூட்ட அல்லது குறைக்க, சட்டக் கமிஷன் பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த சந்திப்பில், இது தொடர்பாக உயர்மட்டக் குழுவினருடன் சட்டக் கமிஷன் நிர்வாகிகள் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக, தங்களுக்கு வசதி உடைய தேதியில் சந்திக்கலாம் என்றும், இது தொடர்பாக மூன்று மாதங்களில் எழுத்துப்பூர்வமாக கருத்துக்களை அனுப்பலாம் என்றும் அரசியல் கட்சிகளுக்கு, உயர்மட்டக் குழு நேற்று கடிதம்எழுதி இருப்பதாகக்கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்