கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது யார்? – பாஜக மீது குற்றம்சாட்டும் அமைச்சர் ரகுபதி

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிணையில் எடுத்துள்ளார் என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறிப்பிடும்போது, “ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய பாட்டிலை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கெனவே பல வழக்குகள் இருக்கின்றன. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே பாஜக அலுவலகம் முன்பு இதேபோல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்தக் கோணத்திலும் தமிழ்நாடு காவல் துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

கருக்கா வினோத் ஏற்கெனவே பாஜக அலுவலகம் முன்பு தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் சிறை சென்றிருந்தார். அந்த வழக்கில் இருந்து வினோத்தை ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்தே அமைச்சர் ரகுபதி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

— எஸ்.ரகுபதி (@regupathymla) October 26, 2023

பின்னணி: சென்னை கிண்டி சர்தார் படேல் சாலையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று மதியம் 3 மணியளவில் அவ்வழியாக நடந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென மறைத்து தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.

இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார்அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டநேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் குண்டு ஓரமாக விழுந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதையடுத்து, எதற்காக பெட்ரோல் குண்டு வீசினாய் என்று போலீஸார் கேட்டதற்கு, ‘ஆளுநர் என்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஒப்புதல் வழங்கவில்லை. ‘நீட்’ தேர்வுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டுவீசினேன்’ என்று மதுபோதையில் உளறியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த இளைஞர் கிண்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார், உதவி ஆணையர் சிவா ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக, கருக்கா வினோத் மீது அரசு அலுவலகம் மீது குண்டு வீசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக காவல் துறை பதிவு செய்துள்ள எஃப்.ஐ.ஆர் விவரம் வெளியானது.

இதனிடையே, “இந்தச் சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை” என்று தெரிவித்துள்ள தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், அச்சம்பவம் மற்றும் அதையொட்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சில விளக்கங்களையும் அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.