கெலாட் மகனுக்கு சம்மன் | “இப்படியெல்லாம் எங்களை அச்சுறுத்த முடியாது” – சச்சின் பைலட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸரா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதுக்கும், மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு சம்மன் அனுப்பியதுக்கும் கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் பைலட், இதன் மூலம் பாஜகவின் பதற்றம் வெளிப்படையாக தெரிகிறது எனக் கூறியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன், வைபவ் கெலாட்டுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த மாதிரியான தந்திரங்களைப் பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர்களை பாஜக பயமுறுத்திவிட முடியாது. மாநில காங்கிரஸின் அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் ஒற்றுமையுடன் ஒன்றாக இருப்போம். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கொண்டு வர மக்கள் முடிவு செய்திருப்பதால் இதுபோன்ற செயல்களின் மூலம் பாஜகவின் பதற்றம் வெளிப்படையாக தெரிகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதேநேரத்தில், ராஜஸ்தான் மாநில தலைவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல்வரின் மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட அதேநேரத்தில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், மஹுயா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கோவிந்த் சிங் தோடஸ்ராவுக்குச் சொந்தமான இடங்களில் தேர்வுத்தாள் வெளியான வழக்கில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான தோடஸ்ராவுக்கு தொடர்புடைய சிகார் மற்றும் ஜெய்பூரில் உள்ள இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சம்மன் விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “அக்டோபர் 25-ம் தேதி காங்ரகிரஸ் வருடத்துக்கு ரூ.10,000, ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் என பெண்களுக்கான வாக்குறுதிகளை வழங்கியது. அக்டோபர் 26-ம் தேதி, மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. விசாரணைக்கு ஆஜராகும்படி எனது மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது ராஜஸ்தானில் அமலாக்கத் துறைக்கு சிவப்பு ரோஜா வரவேற்பு நிகழ்வு நடக்கிறது என்று நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்கும். ஏனென்றால் பெண்களுக்கு, விவசாயிகளுக்கு, ஏழை – எளிய மக்கள் காங்கிரஸ் அரசின் வாக்குறுதி மூலம் பலனடைவதை பாஜக விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்படப் போகும் உறுதியான தோல்வியைப் பார்த்து பாரதிய ஜனதா கட்சி தனது கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ராஸ்தானிலும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு எதிரானது.” என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.