சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை நுழைவுவாயில் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசைமற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தமிழக ஆளுநருக்கு எதிராக வார்த்தைவன்முறைகளும், செயல் வன்முறைகளும் அண்மை காலமாகஅதிகமாக ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் ஊக்கப்படுத்துவது கவலை அளிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர கலவரத்தால் அல்ல. மேலும் ஆளுநரின் மாண்பும், ஆளுநர் மாளிகையின் மாண்பும் காக்கப்பட வேண்டும், தாக்கப்படக்கூடாது என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் செய்வதும், அந்த போராட்டக்காரர்களை அரவணைப்பதுபோல செயல்படுவதும் கண்டனத்துக்குரியது. அதனால்தான் இன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதற்கு தமிழக அரசே காரணம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகைக்கு வரவுள்ள நிலையில், அடிப்படை பாதுகாப்புக்கே குந்தகமான செயல்கள் நடந்திருப்பது, தமிழக உளவுத்துறையும், காவல்துறையும் திமுக ஆட்சியில் மொத்தமாக செயல் இழந்து விட்டதையே வெளிக்காட்டுகிறது. தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்து விட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும் குண்டு வீசி பிடிபட்ட நபர் 2 நாட்கள் முன்னர்தான் சிறையில் இருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்படியானால் ஆளுநர் மாளிகை குண்டுவீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும், இதற்கு பின் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டிருப்பதும் உறுதியாகிறது.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: மாநில அரசமைப்பின் உச்சபட்ச அதிகாரம் படைத்த ஆளுநர் இருக்கும் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. ஆளுநருக்கே பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. இதற்கு காரணமான நபர் ஏற்கெனவே தமிழக பாஜக தலைமையகத்தில் பெட்ரோல் குண்டு வீசியிருந்தார். அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடந்திருக்காது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே சட்டம் ஒழுங்கை சீர்குலைப்போரின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது. ஆளுநர் மாளிகைமீதே பெட்ரோல் குண்டு வீசும் துணிச்சல் ரவுடிகளுக்கு வந்திருக்கிறது என்றால், வன்முறையாளர்கள் மீதுதிமுக அரசு மெத்தன போக்கை கடைப்பிடிப்பதுதான் காரணம் என்றால் மிகையாகாது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: முக்கியத்துவமில்லாத விஷயங்கள் மீது மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக அரசு மும்முரமாக இருக்கும் வேளையில், குற்றவாளிகள் வீதிகளில் இறங்கியுள்ளனர். தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்படுவதால், திமுக அரசே தாக்குதல்களுக்கு காரணமாக இருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆனால் நமது முதல்வரோ தற்போது செய்து வருவதைப் போலவே இந்தச் சம்பவத்தில் இருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருப்பார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் மீது உரிய விசாரணை நடத்தி, உண்மை நோக்கத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். ஆளுநர் மாளிகைக்கு உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திமுக ஆட்சியில் ஆளுநர் மாளிகை முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு முதல்வர் அடக்க வேண்டும்.
இதேபோல், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வி.கே.சசிகலா, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.