மக்கள் போராட்டம், பொதுவுடைமை கொள்கை என அதிதீவிர அரசியலில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தற்போது சினிமா நடிகராகக் களமிறங்கியிருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் சர்ப்ரைஸ் டாபிக்.
சினிமாவுக்குள் எப்படி என்ட்ரி ஆனார்? என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? பல்வேறு கேள்விகளை ‘அரிசி’ பட இயக்குநர் எஸ்.ஏ விஜயகுமாரிடம் முன்வைத்தோம்..
“என்னோட சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் புளியம்பாடி கிராமம். குடும்பமே விவசாயக் குடும்பம். நான் சினிமாவில் இருந்தாலும் இன்னமும் ஊரில் விவசாயம் செய்துகிட்டுதான் வர்றேன். தமிழ்நாட்டுல டெல்டா மாவட்டங்களையும் விவசாயத்தையும் பிரிக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஊருல பிறந்துட்டு விவசாயிங்க பிரச்னை பத்திப் பேசலைனா எப்படி? அதனாலதான், என்னோட முதல் படத்துக்கே விவசாயக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துக்கிட்டேன்!” – அக்கறையுடனும் பூரிப்புடனும் பேச ஆரம்பிக்கிறார், இயக்குநர் விஜயகுமார்.

“‘அரிசி’ விவசாயப் பிரச்னைகளையும் விவசாயிகளின் பிரச்னைகளையும் அழுத்தமாகப் பேசும் படம். முன்பெல்லாம் நெல்லை விளைவித்து நம் தேவைக்கான உணவுக்கும், விதை நெல்லுக்கும் எடுத்துவைத்து விட்டு மீதமான நெல்லைத்தான் விற்பனைக்குக் கொடுப்போம். இப்போதோ, எல்லா நெல்லையும் விற்றுவிட்டு, காசு கொடுத்துத்தான் அரிசியைக் கடையில் வாங்கி உண்கிறோம். கடையில் வாங்கும் அரிசி சத்தானது கிடையாது. அதை உண்பதால் எந்த ஆரோக்கியமும் ஏற்படப்போவதில்லை.
ஒருபக்கம் இப்படியென்றால், இன்னொரு பக்கம் விவசாய நிலங்களைத் தொழிற்சாலைகளாகவும், பிளாட்டுகளாகவும், அபார்ட்மென்ட்டுகளாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில வருடங்களில் விவசாயம் என்பதே காணாமல் போய்விடும். இந்த அவலத்தையெல்லாம் மையப்படுத்தித்தான், ‘அரிசி’ படத்தை உருவாக்கியுள்ளேன். அரிசி என்பது வெறும் தானியம் மட்டுமே கிடையாது. அது மனித வாழ்வின் உயிர்நாடி. இப்படியொரு கதைக்குத் தொழில்முறை நடிகர்களை நடிக்க வைத்தால், படத்திற்கு நிச்சயம் சினிமாத்தன்மை வந்துவிடும். சமூகத்திற்குச் சொல்ல வந்த கருத்து சேராமல் போய்விடும். அதனால்தான், முத்தரசன் ஐயாவை நடிக்க வைத்தேன்.

அவருக்கும் நடிப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரை அணுகியபோது முதலில் மறுத்தவர், பின்பு கதையைக் கேட்டதும் ஒப்புக்கொண்டார். சமூகத்திற்கான கதை என்பதால்தான், ஆர்வம் காட்டி நடித்தார். அவர்தான் படத்தின் ஹீரோ. முத்தையன் என்ற கதாபாத்திரத்தில் விவசாயியாகவே வாழ்ந்துள்ளார்.
மொத்தம் 35 நாள்கள் ஷூட்டிங் நடந்தது. பெரிய பெரிய நடிகர்களே பத்து பதினஞ்சு முறை ரீடேக் போவாங்க. ஆனா, 90 சதவிகிதக் காட்சிகளில் முத்தரசன் ஐயா ரீடேக் போகவே இல்லை. ரொம்ப எதார்த்தமா நடிச்சாரு. முத்தரசன் ஐயா 17 வயசுலருந்து பொது வாழ்க்கையில இருக்கிறார். விவசாயிகளுக்காக இப்போதுவரை போராட்டக் களத்தில் நிற்கிறார். விவசாயிகளின் பிரச்னைகள், வலி, வேதனைகள் எல்லாம் அவருக்குத் தெரியும். அதனால், வசனங்களை எளிதாக உள்வாங்கி இயல்பாகப் பேசி நடித்தார். எதிர்பார்த்தது போலவே, காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன.
படத்தின் இன்னொரு பெரிய ஹீரோ இளையராஜா சார். அவர்தான் இசையமைத்துள்ளார். ‘அரிசி’ முத்தரசன் ஐயாவை எப்படி ஈர்த்ததோ, அப்படித்தான் இளையராஜா சாரையும் ஈர்த்துவிட்டது. கதை அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால்தான், ‘சமூகத்திற்காக நல்ல விஷயம் செய்கிறீர்கள்’ என்று பாராட்டியதோடு இசையமைக்கவும் ஒப்புக்கொண்டார். முதல் பாடல் பதிவு முடிந்துள்ளது. முத்தரசன் ஐயா, இளையராஜா சாரைப் போலவே ‘அரிசி’ உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்று நம்பிக்கையுடன் பேசுபவர், ஷூட்டிங்கில் நடந்த மறக்கமுடியாத அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

“படத்தை முழுக்க முழுக்க தஞ்சாவூர் பகுதிகளில்தான் படமாக்கினோம். முத்தரசன் ஐயா சென்னையிலிருந்து அவரது சொந்த செலவில்தான் வந்துவிட்டுச் சென்றார். தங்கும் செலவுகளைக் கூட அவரே பார்த்துக்கொண்டார். ஒரு டீ கூட எங்களிடம் எதிர்பார்த்ததில்லை.
நாங்கள் ஸ்பெஷலாக உணவு கொடுக்கிறோம் என்றால்கூட ‘எல்லாருக்கும் என்ன சாப்பாடு கொடுக்கறீங்களோ, அதையே தாங்க’ன்னு சொல்லி விரும்பிச் சாப்பிடுவார். அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கிறார். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்தத் தோழரையும் அனுமதிக்கவில்லை. படக்குழுவிற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நடிக்க வந்தவர் படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் குறைகளையும் கேட்க ஆரம்பித்துவிட்டார். மிகச்சிறந்த மனிதநேயர் அவர். இது எல்லாவற்றையும்விட, இந்தப் படத்திற்காக ஒரு ரூபாய்கூட அவர் சம்பளம் வாங்கிக்கல. நாங்க எவ்ளோவோ வற்புறுத்திப் பார்த்துட்டோம். அவர் முடிவுல உறுதியா இருக்கார். உண்மையான மக்கள் போராளி எங்க படத்துல நடிச்சதுல எங்களுக்குச் சந்தோஷம்தான்” என்கிறார் பெருமையுடன்.