பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் ஹமாஸ் ஒளிந்து கொண்டிருப்பது கோழைத்தனமானது – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறது. இது கோழைத்தனமானது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த கடந்த அக்டோபர் 7-ல் தொடங்கிய ஹமாஸ் தாக்குதலையடுத்து போட்டி போட்டுக் கொண்டு இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் அமைப்பும் மாறி மாறி தாக்குல் நடத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் உணவு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் திண்டாடிவருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி மக்களின் நெஞ்சங்களை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன. பாலஸ்தீனத்துக்குச் சீனா, ஈரான், சிரியா, லெபனான் முதலான நாடுகளும், இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்திருக்கின்றன.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் பைடனை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள், இஸ்ரேல், உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டடார். இதையடுத்து இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், கூட்டணி நாட்டுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர், “இஸ்ரேல், தன்னுடைய மக்களின் படுகொலைக்கு பதிலடி கொடுக்க உரிமை உள்ளது. அதே நேரத்தில் அதற்கான கடமையும் உள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக, தற்காத்து கொள்வதற்கான இஸ்ரேலின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்.

காசா முனையிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ, பரந்து விரிந்துள்ள பாலஸ்தீனிய மக்களின் பிரதிநிதியாக ஹமாஸ் அமைப்பு இல்லை என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன மக்களுக்கு பின்னால் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறது. இது கோழைத்தனமானது.

காசாவில் உள்ள அப்பாவி மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஹமாஸ் அமைப்பினரால் காசா பகுதியில் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்காக அமெரிக்கா 24 மணி நேரமும் உழைத்து வருகிறது” என்றார்.

இதையடுத்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், “இஸ்ரேல் மக்களாக இருந்தாலும் சரி, பாலஸ்தீன மக்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அப்பாவி உயிரையும் இழந்ததற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். எவ்வாறாயினும், நெருக்கடி காலங்களில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிப்பது மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.