மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை

 

  • அனைத்துத் துறைகளுக்கும் மாற்றமடையாத கொள்கை – அமைச்சர் மனுஷ நாணாயக்கார.

மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்   (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணாயக்கார,

கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டுவர நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். வரலாற்றில் அதிகளவிலான சட்டவிதிமுறைகளை நிறைவேற்றும் காலமாக இக்கால கட்டத்தைக் குறிப்பிடலாம்.

நாட்டில் உள்ள முறைமையை (Systems Change) மாற்ற வேண்டும் என்றே மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். எனவே அந்த மாற்றத்தைக் கொண்டு வரவே காலங்கடந்த சட்டங்களுக்குப் பதிலாக இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில், அதிகமான சட்ட விதிமுறைகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதேபோன்று, அரசாங்கம் மாறும்போது மாற்றம் அடையாத, ஆளும் கட்சிகள் மாறும்போது மாற்றமடையாத, நிலையான கொள்கைகளைத் தயாரிக்கும் பணிகளும் தற்போது இடம்பெறுகின்றன. அதன்படி, ஐந்தாண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கை இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு அனைத்துத் துறைகளுக்குமான கொள்கைகள் தயரிக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டில் நிதி ஒழுக்கத்தை உருவாக்கினால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியம் உட்பட வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நாடுகள் எமது நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவ முன்வருவார்கள். அதனாலேயே நாம் எமது நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பிலான குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். குறிப்பாக, முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அவர்களின் தலைமையில் அரசியல் கட்சிகளின் நிதி மற்றும் செலவுகள் தொடர்பிலான ஒரு ஆணைக்குழுவை நியமிக்கவும் எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறு அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும் என்பதை இக்குழு ஆராயும். எதிர்காலத்தில் இக்குழுவுக்கு பொதுமக்களும் தமது ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதேபோன்று, தொழிலாளர் சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தொழில் வாய்ப்பு சட்ட மூலம் என்ற வகையில் எதிர்காலத்தில் அதனை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். இது பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும். ஏனென்றால், மனித வள முகாமைத்துவம் என்பது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக வீழ்ச்சி கண்ட தொழில் முயற்சிகளை இனங்கண்டு அவற்றை மீண்டும் மீட்டெடுக்க அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பணிகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.

மேலும், வெளிநாட்டில் பணி புரிபவர்களின் மேம்பாடு, தொழில் பாதுகாப்பு உட்பட அவர்கள் நாட்டுக்கு வழங்கும் ஆதரவுக்காக, அவர்களுக்கு சலுகைகளையும் நிவாரணங்களையும் வழங்க பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.” என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார்.

PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.