சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 31-ம் தேதி மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக அரசு கொள்கை முடிவு எடுக்கும்போது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தின் விவாதப் பொருள்கள் குறித்து முன்னதாகவே, அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதால், புதிய தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், துறை வாரியாக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு மற்றும் ஆளுநர் விவகாரம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தக் கூட்டம் அதிக முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.